ஏமாற்றம்? மதுரை மத்திய தொகுதி பக்கமே வராத எம்எல்ஏ முஸ்தபா.. உட்கட்சி பூசலால் சொந்த தொழிலில் கவனம்!
மதுரை: மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபாவுக்கும் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. தவெக கட்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் முஸ்தபாவை தவெக நிர்வாகிகள் ஒதுக்கி வருவதால், அவர் அரசியலை விடவும் தனது இறைச்சி ஏற்றுமதி தொழிலில் கவனம் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றவர் முஸ்தபா. அவர் தவெகவில் நேரடியாக இணைந்து போட்டியிடவில்லை. மாறாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் என்ற கட்சியை நடத்தி வந்தார். அவர் தான் தவெகவுடன் முதன்முதலில் கூட்டணி அமைத்தவர். தனிச் சின்னத்தில் போட்டியிடாமல் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

இருப்பினும் அமைச்சரவையில் முஸ்தபாவுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்ன வார்த்தையால், அவரது ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் முஸ்தபாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. இதன்பின் அவரது கட்சியை தவெகவுடன் இணைத்து, கட்சிப் பதவியை எதிர்பார்த்தார்.
ஆனால் தவெக தலைமை அமைதியாகவே இருந்து வருகிறது. தவெக தலைமையின் அமைதிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக கல்லாணை, தங்கப்பாண்டியன் மற்றும் மருதுபாண்டியன் ஆகிய மூவரும் தான் முக்கியக் காரணமாக இருக்கின்றனர். ஏனென்றால் மதுரை வடக்கு, மதுரை மேற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு நெருக்கமாக இருக்கும் தொகுதி மதுரை மத்தி.
தங்களின் அதிகாரம் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக முஸ்தபாவுக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது என்பதில் மூவரும் தெளிவாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தவெக கட்சி நிகழ்ச்சியில் கூட முஸ்தபாவுக்கு முறையான அழைப்புகளை விடுப்பதில்லை. அரசியல் நிகழ்ச்சிகளிலும் அவருக்கான மரியாதையை வழங்குவதில்லை.
இதனால் முஸ்தபா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் கட்சியில் முக்கியத்துவம் இல்லாததால், ஆதரவாளர்களை கூட சந்திக்க முடியாமல் இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் முஸ்தபாவின் பரிந்துரைகளை தவெக தலைமை கண்டுகொள்ளாது என்பதை உணர்ந்ததால், அவர் தொகுதி பக்கம் வருவதையும் குறைத்து கொண்டுள்ளார்.
கடந்த மாதத்தில் ஆய்வு என்ற பெயரில் சில வீடியோக்களை மட்டுமே முஸ்தபா பதிவிட்டிருந்தார். அதன்பின் முஸ்தபா மொத்தமாக தனது கால்நடை இறைச்சி ஏற்றுமதி தொழிலில்தான் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் உள்ளூர் நிர்வாகிகளும், தொகுதி மக்களும் முஸ்தபாவை தேடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் தொகுதி மக்களின் குறையை நேரடியாக கேட்டறியும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கே வாக்களித்திருக்கலாம் என்ற புலம்பல்களும் மக்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
