நகை திருடு போனது உண்மை தான்.. ரொம்ப கஷ்டப்படுறேன்! அஜித் குமார் வழக்கில் ஆஜரான நிகிதா வேதனை
மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நகை காணாமல் போனதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்ட நிலையில் இன்று மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராகிய பேராசிரியை நிகிதா, நகை காணாமல் போனது உண்மை தான் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அஜித் குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு" என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித் குமார் (வயது 29). கடந்த ஜூலை மாதம் அஜித் குமார் மீது நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு புகார் தெரிவித்தார்.

அஜித் குமார் லாக் அப் டெத்
இந்த புகார் குறித்து அஜித் குமாரை விசாரணைக்காக தனிப்படை போலீசார் அழைத்து சென்றனர். பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற நிலையில் போலீசார் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஜித் குமார் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து, மானாமதுரையை சேர்ந்த தனிப்படை போலீசாரான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், போலீஸ் வாகன டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
ஒன்றுமே இல்லாத வழக்கில் கொலை
இதையடுத்து அஜித் குமார் லாக் அப் டெத் வழக்கை சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோர்டில் தாக்கல் செய்தது. இதில் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 4 போலீசார் பெயர்கள் சேர்க்கப்பட்டது. அஜித் குமார் கொலை வழக்கில் 5 போலீசார் ஜாமீன் கேட்ட நிலையில் அது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் நிகிதா அளித்த புகாரில் உண்மை இல்லை என்றும், போலீசார் தாக்கியதால் தான் அஜித் குமார் உயிரிழந்தார் என்றும் கூறியது. இதனைக் கேட்ட நீதிபதிகள் நிகிதா மீது நடவடிக்கை எடுத்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும் ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்து கொலை செய்து இருக்கிறார்கள்.
நேரில் ஆஜராகிய நிகிதா
அஜித் குமாரை கொன்ற காவல் துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும். அஜித் குமார் மரண வழக்கில் யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை உள்ளேயே இருக்கட்டும் என்று கூறினார். இதற்கிடையே நிகிதாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜராகினார். இதற்கு பிறகு நீதிமன்றம் உத்தரவுப்படி நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என தெரிகிறது.
நகை திருடு போனது உண்மை தான்
தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிகிதா கூறுகையில், "நகை திருடு போனது உண்மை தான்.. இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.. அஜித் குமார் இழப்பு ஈடு செய்ய முடியாதது. எங்களுக்கு எதுவுமே தெரியாது. என் தாயின் நகை காணாமல் போனதற்கு புகார் கொடுத்தோம். அதற்கு பிறகு எங்களுக்கு எதுவும் தெரியாது.. போலீசார் வந்து சொல்லும்போது தான் எங்களுக்கே தெரிந்தது. அஜித் குமார் இறந்தது எங்களுக்கே பெரிய அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறினார்.
அஜித் குமாரின் தாய் பேட்டி
ஏற்கனவே அஜித் குமாரின் தாயார் மாலதி கூறுகையில், என் மகன் தப்பு செய்திருக்க மாட்டான் என எனக்கு தெரியும்.. இப்போது நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது. பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்.. என் மகன் அஜித் குமாரை தாக்க சொல்லியது யார் என்பது தெரியவேண்டும்.. என் மகனை அடித்து கொன்ற போலீஸ்காரர்கள் வெளியே வரவே கூடாது என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications