முதல்வர் மீது அவதூறு பேச்சு! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீதான வழக்கு.. இன்று விசாரணை
மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் மீது அவதூறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிசாமி, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான வழக்கு நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த அவதூறு வழக்கு குறித்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் ஆர்ப்பாட்டத்தில் உண்மையைதான் கூறினேன். ஆனால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். நான் பொது வாழ்வுக்கு வரும் போது திமுக தொடர்ந்த கொலை வழக்கிலேயே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அந்த வழக்கில் குற்றமற்றவன் என நான் நிரூபித்துவிட்டு விடுதலையானேன்.
எனவே அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்குகள் எல்லாம் எனக்கு ஜூஜூபி. பொது வாழ்க்கைக்கு வந்ததும் அதிமுகவினர் இது போல் நிறைய வழக்குகளை சந்தித்துள்ளார்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறியிருந்தார். அதன் பேரில் இன்றைய தினம் இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications