மதுரையில் கேட்ட துப்பாக்கி சத்தம்.. ஹைகோர்ட் வாசலில் மகாலிங்கம் எழுதிய வரிகள்! யாரிந்த காவலர்?
மதுரை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று விடிகாலை இந்த தற்கொலையை செய்து கொண்டுள்ளார் மகாலிங்கம்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் உடனடியாக துவக்கி உள்ளனர். மகாலிங்கத்தின் தற்கொலை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து பணி செய்வதால் அவர்கள் அதிகளவு மன அழுத்தத்துக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

இதனால், காவலர்கள் பலர் மது பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.. இதுபோன்ற துயரங்களை தடுக்கும் நடவடிக்கையாக 'மகிழ்ச்சி' என்ற திட்டம் போலீசாரால் தொடங்கப்பட்டது.
காவலர்களுக்கு கவுன்சிலிங்
இத்திட்டம் மூலம் தற்கொலை எண்ணம் உடையவர்கள், தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பவர்கள், இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள், மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள், பணியில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள், குடும்ப பிரச்சினைக்கு ஆளானவர்கள் இப்படி பலரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நாகை அபிநயா
எனினும்கூட, போலீசாரின் தற்கொலைகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. 5 மாதங்களுக்கு முன்பு, மயிலாடுதுறையில் அபிநயா என்ற பெண் போலீசும் தற்கொலை செய்தது நினைவிருக்கலாம்.. நாகை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கருவூல பதிவேடுகள் அறையில், நாகை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் காவலர் அபிநயா..
இவரும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலை செய்திருந்தார்.. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. அப்போது கருவூல பதிவேடுகள் அறை பகுதியில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிச்சென்று பார்த்தபோது, கழுத்து பகுதியில் துப்பாக்கியால் சுட்டு, அபிநயா இறந்து கிடந்தார்.. நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுசம்பந்தமான விசாரணையை கையில் எடுத்தனர்.. 29 வயதான மன உளைச்சலில் இருந்த அபிநயா, மருத்துவ விடுப்பில் சென்ற நிலையில், 5 நாட்களுக்கு முன்புதான், மீண்டும் பணிக்கு வந்தாராம். கலெக்டர் ஆபீஸில் அபிநயாவின் தற்கொலை நாகையை அதிர வைத்தது நினைவிருக்கலாம்.
மதுரை போலீஸ்காரர் தற்கொலை
இன்று மதுரையிலும் ஒரு காவலர் தற்கொலை செய்துள்ளது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..
மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை செயல்பட்டு வருகிறது... இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்படை போலீஸ்காரர் மகாலிங்கம், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இன்று பணியில் இருந்தபோதே, அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலிலேயே இந்த தற்கொலையை செய்துள்ளார்.
யாருமே காரணம் இல்லை
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்.. இவருக்கு 45 வயதாகிறது.. தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு, தனக்கு தானே துப்பாக்கி சுட்டுக்கொண்டு மகாலிங்கம் உயிரிழந்துள்ளார்.
அந்த கடிதத்தில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதியுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்ததற்கு, பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications