வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.. மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தி உள்ளது. வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக்கிறது. சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற. ஆதனூர் கண்மாயின் கொள்ளளவு 22.87 மில்லியன் கன அடி ஆகவும், பாசன பரப்பு 220.49 ஏக்கர் ஆகவும் உள்ளது.

வைகை ஆற்றில் இருந்து நீர் திறந்து ஆதனூர் கண்மாய்க்கு விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும், ஆதனூர் கண்மாயில் நீர் நிரம்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதில், மதுரை வைகை கரையோரம் மாநகராட்சி சார்பில் குப்பை
தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் குடியிருப்போர் வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வைகை ஆற்றில் பைக்குகள், வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர்; குப்பை கொட்டுகின்றனர் என வேதனை தெரிவித்தனர். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, மேலும் இந்த மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications