2.15 மணிக்குள் அகற்றனும்! இல்லாவிட்டால்.. நெல்லை திமுக பேனர்களுக்கு புதிய சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: திருநெல்வேலியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள திமுகவின் பிளக்ஸ் பேனர்களை மதியம் 2.15 மணிக்குள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரில் பல இடங்களில் திமுக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டோவுடன் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பல பேனர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும், போக்குவரத்தும் இந்த பேனர்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் திருநெல்வேலியை சேர்ந்த பாலாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ‛‛திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிளக்ஸ் பேனர்கள் திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு போக்குவரத்து பிரச்சனையும் ஏற்படுகிறது.
இந்த பேனர்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. பேனர் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருப்பினும் விதிகள் மீறப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களை அகற்ற மாாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பேனரை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு என்பது மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு தரப்பு மற்றும் நெல்லை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், ‛‛பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா?'' என கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து மதியம் 2.15 மணிக்குள் திருநெல்வேலியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்'' என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மதியம் 2.15 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications