ஒரு தலைக்காதல் "விபரீதம்!" 14 வயது மாணவியை எரித்து கொன்ற ஏசி மெக்கானிக்.. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி
மதுரை: காதலிக்க மறுத்த 14 வயது சிறுமியை எரித்துக் கொன்ற வழக்கில். மதுரை ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு அளித்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுபோன்ற மோசமான ஒரு சம்பவம் தான் மதுரையில் அரங்கேறியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

ஒரு தலைக்காதல்
இவர் அதே பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பின்னால் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். மேலும், 14 வயதே ஆகும் அந்த மாணவி தன்னை காதலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மிரட்டியுள்ளார். இப்படித்தான் கடந்த 2018 பிப். 16ஆம் தேதி அந்த மாணவி, பள்ளி முடிந்து அவரது தோழிகளுடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்து பாலமுருகன் அவர்களை வழிமறித்து உள்ளார்.

உயிரிழந்தார்
மேலும், தன்னை காதலித்தே தீர வேண்டும் என்றும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த பாலமுருகன், அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளார். இதில் அந்த மாணவிக்கு மிக மோசமான தீக்காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி சில நாட்களில் உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை
இதையடுத்து இந்த வழக்கில் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். பாலமுருகன் மீதான குற்றச்சாட்டுச் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மதுரை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இருப்பினும், இந்தத் தண்டனையை ரத்து வேண்டி பாலமுருகன் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில், இதில் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

ஆண்கள்
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "தனது காதலை ஏற்க மறுத்த பெண் உலகில் இருக்கக்கூடாது என்று குற்றவாளி நினைத்து உள்ளார். அந்த பெண் யாருடனும் வாழக் கூடாது என்று முடிவு செய்து மாணவியைக் கொலை செய்ய வேண்டும் என்று குற்றவாளி முடிவுக்கு வந்துள்ளார். தங்கள் விருப்பத்தை முடிவு செய்யும் உரிமை எப்போதும் பெண்களுக்கு உள்ளது. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆண்கள் நினைக்கிறார்கள்.

உணர்ச்சிவசப்படுகிறார்கள்
இந்த காலத்து இளைஞர்கள் ஈஸியாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். எதிர்பார்ப்புகள் நடக்கவில்லை என்றால் பின்விளைவுகளைக் கூட யோசிக்காமல் கொடூர மனநிலைக்குச் செல்கிறார்கள். நமது கல்வி முறையில் நுண்ணறிவு அளவுகோலை விட உணர்வுப்பூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். உணர்வுப்பூர்வமான அளவுகோலுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றால் இளைஞர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது.

அதிரடி
இளைஞர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கூட உணர்வு பூர்வ சவால்களை எதிர்கொள்ள முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் மீதான குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முகாந்திரம் இல்லை என்பதால் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த தீர்ப்பை உறுதி செய்கிறோம்" என்று தீர்ப்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications