மீனாட்சிக்கு சம்பந்தமே இல்லையா? நிஷாந்த்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.
கொள்ளைக்கு முன்பாக ஒரு மர்ம நபர் வாடிக்கையாளரை போல பலமுறை கடைக்கு வந்து சென்றதைக் கண்டறிந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர் மதுரையைச் சேர்ந்த நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது.
நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி, நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்தது தெரியவந்தது. சந்தேகப்படும்படியாக இருந்த அவரை பேருந்து நடத்துனர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தருமபுரி அதியமான் கோட்டை காவல்துறையினர் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி என்ற இடத்தில் நிஷாந்த்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிஷாந்தை, போலீசார் மதுரைக்கு அழைத்து வந்தனர்.
நிஷாந்த்தை 17 ஆம் தேதி காலை, 9 மணிக்கு மதுரை குற்றவியல் மாஜிஸ்திரேட் எண் 5ல் நீதிபதி லட்சுமி பிரியா முன்னிலையில், அவரது வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 1 ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் நிஷாந்த் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 11 கிலோ 900 கிராம் நகைகள் மொத்தமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ்.எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது பகல் 12 மணி அளவில் நிஷாந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, தனது கடன்களை அடைக்கவும், யூடியூப் சேனலை மேம்படுத்துவதற்காகவும் தான் நகைக்கடையில் கொள்ளை அடித்ததாகவும், மீனாட்சிக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் நிஷாந்த் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. நிஷாந்த் உண்மையைச் சொல்கிறாரா அல்லது மீனாட்சியை காப்பாற்றுவதற்காக மாற்றிச் சொல்கிறாரா என போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
