மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்.. கொடி மரம் கிட்ட யாரு? உடனே கிளம்பி வந்த இந்து அமைப்புகள்.. என்னாச்சு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைடு குறித்து சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது.. கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்' என்று இந்து முன்னணி இன்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.
"இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் உள்ளே வர அனுமதியில்லை" என்ற வாசகம் அடங்கிய பலகையை இன்று பரவலாக பல வடமாநில கோவில்களின் வாசல்களில் காண முடிகிறது... இந்த விதிமுறைகள் மிக கடுமையாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.. முக்கியமாக, காசி விஸ்வநாதர் கோவில், புரி ஜெகந்நாதர் கோவில் ஆகியவற்றில் இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்து கோவில்கள் சக்தியை உருவாக்கும் ஆற்றல் மையங்களாக கருதப்படுகின்றன. இங்கு நடத்தப்படும் கும்பாபிஷேகம், பிரனபிரதிஷ்டை, ஆவாஹணம் போன்ற புராதன கோவில்களில் ஒலி அதிர்வலைகள் நிறைந்து காணப்படுகின்றன.
அதிர்வலைகள்: ஆனால் பிற மதத்தினர் அதிர்வலைகள், ஒலி ஆற்றல்கள் வேறானவை.. மாறுபட்ட ஆற்றல்கள் உள்ளே வருவதால் புனித தன்மையான ஆற்றலின் தன்மை கெடுவதாகவும், இது மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாலும்தான் பிற மதத்தினர் இந்து கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று காரணங்களும் சொல்லப்படுகின்றன.
எனினும், நம்முடைய தென் தமிழகத்தில், இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை.. இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் கைடு ஒருவர், குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றதாக சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது.. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்த துவங்கியிருக்கின்றன.
அறிவிப்பு பலகை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடி மரம் வரை மாற்று மதத்தினர் வர அனுமதி இருக்கிறது. அதை தாண்டி சன்னதி வரை இந்து மதத்தினர் மட்டுமே செல்ல முடியும். இதுதொடர்பாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
உலக புகழ்வாய்ந்த இந்த கோயிலின் கட்டிடக்கலையை காண்பதற்காக தினந்தோறும் வெளிநாட்டு நபர்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். எனவே, இந்த கோயிலின் சிறப்புகளையும், கட்டிடம் மற்றும் சிற்பக்கலையையும் விளக்கி சொல்வதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கைடுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கோரிப்பாளையம் ரஷீத் உசேன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.. கடந்த 2014 முதல் இவர் "கைடாக" கோயிலுக்கு சென்று வருகிறார். ஆனால், இவர் கொடி மரத்தை தாண்டி சன்னதி வரை சென்றதாக சர்ச்சை வெடித்தது.. எனவே, இதனை போலீசார் விசாரிக்க துவங்கினார்கள்.. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
கேமரா பதிவு: ஆனால், அவர், கொடி மரத்தை தாண்டி செல்வதாக கேமராவில் இல்லையாம்.. ஆனால், இனி வரும் காலங்களில் எந்த மதத்தைச் சேர்ந்த கைடாக இருந்தாலும் கொடி மரத்தை தாண்டி சுற்றுலா பயணிகளுடன் செல்லக்கூடாது என்று போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக கைடுகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாகவும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கைடுகளுக்குரிய வழிமுறைகளை பின்பற்றும்படி தெரிவித்திருப்பதாக, சுற்றுலாத்துறையும் தெரிவித்துள்ளது.. ஆனாலும், இந்து அமைப்புகள் சமாதானம் ஆகவில்லை.. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்து முன்னணி: இதுகுறித்து, இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் அரசுபாண்டி சொல்லும்போது, ''பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீசாரின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. கைடு விவகாரத்தை போலீசார் மூடி மறைக்க பார்க்கின்றனர். முறையான விசாரணை செய்து கவனக்குறைவாக இருந்த போலீசார், கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும்'' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications