“தீர்த்தம் தெளிக்காம யாரும் நகரமாட்டோம்..” மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கடும் கோபம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கைக் காண வந்த பக்தர்கள், தீர்த்தம் தெளிக்கப்படாததால் கடும் கோபமடைந்துள்ளனர். குடமுழுக்கு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வழக்கப்படி 2021 ல் நடைபெற வேண்டிய இந்த விழா, 2018 பிப்ரவரி 2 அன்று வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாகவும், தொடர்ந்து வந்த கொரோனா பரவல் காரணமாகவும் தள்ளிப் போனது.

சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தை, பழமை மாறாமல் அரிய வகைக் கருங்கற்களைக் கொண்டு செதுக்கிப் புனரமைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது. சுமார் 186 திருப்பணிகள் திட்டமிடப்பட்டு, தமிழக அரசு மற்றும் உபயதாரர்களின் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மிக நுணுக்கமாக நிறைவு செய்யப்பட்டன.
யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிர மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தி வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்வாகக மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு 5.45 மணிக்கு நடைபெற்றது. அதனை சிவாச்சாரியார்கள் 4 ராஜ கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு கொண்டு சென்றபிறகு சரியாக 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு பக்தர்களின் கோஷங்கள் விண்ணதிர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கைக் காண வந்த பக்தர்கள், தீர்த்தம் தெளிக்கப்படாததால் கோபமடைந்துள்ளனர். குடமுழுக்கு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடமுழுக்கு செய்து தீர்த்தம் தெளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். ட்ரோன் மூலமாவது தீர்த்தம் தெளித்து இருக்கலாம் என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் பேசுகையில், "2 மணியில் இருந்து காத்திருக்கிறோம். என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? பொதுமக்களுக்கு ஏன் தீர்த்தம் தெளிக்கவில்லை? இதை நாங்கள் டிவியிலேயே பார்த்திருப்போமே.. தீர்த்தம் தெளிக்காமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்துகிறீர்கள்?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
