மதுரையில் காவலர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு.. தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
மதுரை: மதுரையில் காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனிப்படை காவலர் மலையரசன் என்பவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவரை இன்று போலீசார் சுட்டு பிடித்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் எரியக்கரை அருகே கடந்த 19 ஆம் தேதி சாலையோரம் எரிந்த நிலையில் ஒருவரது உடல் கிடந்தது. இதில் அவர் தனிப்படை காவலரான மலையரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவர் தான் மலையரசனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவத்தன்று காவலர் மலையரசன் இவரது ஆட்டோவில் தான் சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு ஆட்டோ டிரைவர் தான் மலையரசனை கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் இன்று காலையில் மூவேந்திரனை பிடிக்க போலீசார் சென்றனர்.
அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, மூவேந்திரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications