மதுரைக்கு வந்த கிரிக்கெட் ஸ்டேடியம்.. ராக்கெட் வேகத்தில் உயரும் நிலத்தின் மதிப்பு.. எல்லாமே மாறுதே!
மதுரை: மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டுள்ள நிலையில், டைடல் பார்க், எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஏராளமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மதுரையின் முக்கியப் பகுதி மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பின் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாக மதுரை இருக்கிறது. தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் அதிகளவில் மதுரைக்கு வரவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஐடி துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் டைடல் பார்க் அறிவிப்பு மதுரைக்கு கேம் சேஞ்சராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஜனவரி முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கீழடி அருங்காட்சியகம், இன்னொரு பக்கம் உயர்மட்ட பாலப் பணிகள், கோரிப்பாளையம் பாலம் ஆகியவை விரைவாக கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரை விரகனூர் அருகே வேலம்மாள் மருத்துவமனை அருகில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. அதனை நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். மதுரையின் அத்தனை திசைகளிலும் ஏதேனும் ஒரு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக மதுரையை சுற்றி ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி 3 மடங்காக அதிகரித்துள்ளது. மதுரைக்கு தொழில் முதலீடுகள் செய்யப்படவில்லை என்று அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது, மதுரையில் காலி இடங்களே இல்லை என்று கூறி இருந்தார்.
அந்த அளவிற்கு மதுரையில் இடம் வாங்குவது கடினமான விஷயமாக அமைந்துள்ளது. வண்டியூர் பகுதிகளில் ஒரு சென்ட் இடம் மார்க்கெட் விலையின் படி ரூ.10 லட்சம் வரை செல்கிறது. அதேபோல் விரகனூர், வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சிந்தாமணி பகுதியில் ஒரு சென்ட் ரூ.14 லட்சம் வரை செல்வதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட உடனே, பலரும் தோப்பூர் மற்றும் அதன் அருகில் இடம் வாங்க தொடங்கிவிட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன் தோப்பூரில் சில ஆயிரங்களுக்கு விற்பனையாகி வந்த நிலங்கள், இன்று பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அலங்காநல்லூர் செல்லும் சாலைகளில் ஒரு சென்ட் குறைந்தபட்சம் ரூ.8 லட்சமாக இருக்கிறது.
இதனிடையே விமான நிலைய விரிவாக்கத்திற்காக அருப்புக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, புதிதாக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக தொடங்க உள்ளன. இதனால் புதிய நெடுஞ்சாலை அமைய உள்ள இடத்தை சுற்றி இப்போதே பிளாட்கள் போடப்பட்டு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
அதேபோல் திருமங்கலம் செல்லும் சாலை அமைந்துள்ள ஜோஹோ நிறுவனத்தை சுற்றி இப்போதே பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கும் ஜி ஸ்கொயர் பிளாட்கள் போட்டு விற்பனையை தொடங்கி இருக்கிறது. மதுரையை சுற்றி புறநகர் பகுதிகளிலேயே ஒரு சென்ட் நிலம் லட்சங்களை தொட்டுள்ள நிலையில், மதுரையின் முக்கியப் பகுதிகளில் நிலம் கிடைப்பதே அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications