மதுரை ரிங் ரோடு ரெடி.. 45 நிமிட பயணம் இனி 20 நிமிடமே! வனவிலங்குகளுக்கு தனி பாலம்.. என்னென்ன வசதிகள்?
மதுரை: மதுரையை சுற்றி வாகனங்கள் பயணிக்கும் முறையையே மாற்றும் வகையில் புதிய சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை 45 நிமிடங்கள் எடுத்த பயணம் இனி 20 நிமிடங்களில் முடியப்போகிறது. வாகனங்கள் வேகமாக செல்ல வசதி, வனவிலங்குகள் பாதுகாப்பாகக் கடக்க தனிப் பாலம், ஏஐ மூலம் கண்காணிப்பு என இந்த சாலையில் ஏகப்பட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் சில ஹைலைட்ஸ்கள் உள்ளன.. அவை என்னென்ன தெரியுமா?
மதுரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள ரிங் ரோடு 30 கி.மீ. நீளம் கொண்டது... இதை அமைக்க ரூ.1,024.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாலை, மதுரை நகருக்குள் ஏற்படும் டிராபிக்கை குறைக்க உதவும்.

மதுரை ரிங் ரோடு - வசதிகள்
வாடிப்பட்டியிலிருந்து தாமரைப்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலை 744A-=ல் இந்த சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்தாமல், முற்றிலும் புதிய பாதையில் இந்த சாலை போடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் நுழையாமலேயே நகரைக் கடந்து செல்ல முடியும்.
குறிப்பாக, நீண்ட தூரம் செல்லும் வாகனங்கள், சரக்கு லாரிகள், மதுரை வழியாக மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் வர வேண்டிய அவசியமே இருக்காது. இதனால் நகருக்குள் வாகன நெரிசலும் குறைய வாய்ப்புள்ளது.
2 நெடுஞ்சாலைகளுக்கு இணைப்பு
இந்த ரிங் ரோடு 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ள திண்டுக்கல் - மதுரை வழித்தடத்தையும், தேசிய நெடுஞ்சாலை 38-ல் உள்ள திருச்சி - மதுரை வழித்தடத்தையும் இந்த சாலை இணைக்கிறது.
இதனால் இந்த இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே செல்லும் வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் பயணிக்க முடியும். மதுரை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை உதவியாக இருக்கும்.
45 நிமிட பயணம் 20 நிமிடங்களாகும்
இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இந்தப் பகுதியில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 40 கி.மீ. ஆக இருந்தது... அதாவது சுமார் 45 நிமிட பயணம் இனி 20 நிமிடங்களிலேயே முடிய வாய்ப்புள்ளது.. இதனால் எரிபொருள் செலவும் குறைய வாய்ப்புள்ளது.
பாலங்கள், சுரங்கப்பாதைகள்
இந்த 30 கி.மீ. சாலையில் வாகனங்கள் தடையின்றி செல்ல பல இடங்களில் பாலங்களும் சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4 பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு செல்ல 2 சுரங்கப்பாதைகளும், 2 மேம்பாலங்களும், 2 பறக்கும் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்காமல் செல்ல 51 பெட்டி வடிவ கால்வாய்களும், 93 குழாய் வடிவ கால்வாய்களும் உள்ளன. மக்கள் சாலையை பாதுகாப்பாகக் கடந்து செல்ல 2 தனி சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, வாகனங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து வந்து சீராக பிரிந்து செல்லும் வகையில் ஒரு சிறப்பு சந்திப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Partial Cloverleaf Interchange என்பதாகும்.. இந்த அமைப்பால் சந்திப்புகளில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதாமல், தங்களுக்கு வேண்டிய பாதையில் திரும்பிச் செல்ல முடியும்.
உள்ளூர் மக்களும் இந்தச் சாலையை பயன்படுத்துவதற்கு வசதியாக 2 பக்கமும் சேர்த்து 11.32 கி.மீ. நீளத்துக்கு சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் அருகே இளவன்குளத்தில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளுக்கும் தனிப் பாலம்
இந்த ரிங் ரோட்டில் இன்னொரு ஹைலைட் என்ன தெரியுமா? வனவிலங்குகள் சாலையை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள தனிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.. வகுத்துமலை - வண்ணாத்திக்கரடு வனப்பகுதி வழியாக இந்த சாலை செல்கிறது. இந்த பகுதியில் காட்டெருமை, புள்ளிமான், காட்டுப்பன்றி, இந்திய முயல் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இவை உணவு தேடியோ, தண்ணீர் தேடியோ சாலையைக் கடக்க வேண்டிய நிலைமை வருகிறது. அந்த நேரத்தில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.
அதனால்தான் இதை தவிர்க்கவே, வனவிலங்குகள் செல்வதற்காகத் தனியாக ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 35.2 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் வழியாக விலங்குகள் சாலையைக் கடக்காமல் பாதுகாப்பாகச் செல்ல முடியும்.
வாகனங்களின் சத்தம் விலங்குகளை அச்சுறுத்தாமல் இருக்க இந்தப் பாலத்தில் ஒலி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுபோன்ற வனவிலங்கு மேம்பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
AI கேமராக்கள் கண்காணிப்பு
இந்த சாலையில் போக்குவரத்தை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதற்காக Advanced Traffic Management System (ATMS) என்ற போக்குவரத்து மேலாண்மை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.. அதேபோல மின்னணு அறிவிப்புப் பலகைகளும் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. எங்காவது விபத்து நடந்தாலோ, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, சாலையில் ஏதேனும் ஆபத்து இருந்தாலோ அதுபற்றிய தகவல்களை இந்தப் பலகைகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க முடியும்.
PTZ வகை கேமராக்கள் மூலமும் சாலையில் நடக்கும் சம்பவங்களைக் கண்காணிக்க முடியும். அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றையும் கண்டறிய இந்தக் கண்காணிப்பு வசதிகள் உதவும்.


Click it and Unblock the Notifications
