அடுத்தடுத்து தமிழகத்தை உலுக்கும் சம்பவங்கள்: மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் இன்று சடலமாக மீட்பு!
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தை சேர்ந்த பெரியகருப்பன் - சத்தியா தம்பதியின் 7 வயது ஆண் குழந்தை முத்துச்செல்வம் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தீவிரமாகத் தேடினர்.

சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுவனை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை நடத்திய தொடர் தேடுதல் வேட்டையின் போது, சிறுவனின் வீட்டின் அருகே சிறிது தூரத்திலேயே உள்ள ஒரு பழைய, கைவிடப்பட்ட பாழடைந்த ஓட்டு வீட்டில் அச்சிறுவன் சடலமாகக் மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் எவ்வாறு உயிரிழந்தான்? இது கொலையா அல்லது விளையாடும்போது நேர்ந்த ஏதேனும் விபத்தா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாழடைந்த வீட்டில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் உள்ளதா என்றும், அப்பகுதியில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
