தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கும் போலீஸ்.. நெட்வொர்க்கில் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் நடந்த மெகா கொள்ளைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் யூடியூபர் நிஷாந்தைப் பிடிக்கும் போலீசாரின் தேடுதல் வேட்டை தற்போது நான்காவது நாளை எட்டியுள்ளது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை, நகைக்கடையின் பின்புறம் இருந்த இரும்புச் சாரங்கள் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிய மர்ம நபர், லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாகக் கடைக்குள் இறங்கி அங்கிருந்த நகைகளை அள்ளிச் சென்றார். முதலில் 15 முதல் 23 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 11 கிலோ நகைகள் (10 கிலோ தங்கம் மற்றும் 1 கிலோ வைர நகைகள்) திருடு போயுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Madurai Tanishq Heist

இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி என்கிற மீனாட்சி நாச்சியார் ஆகிய இருவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல திடுக்கிடும் தகவல்கள்

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பணக்கஷ்டத்தில் இருந்த காதலி மீனாட்சிக்கு உதவுவதற்காகவே நிஷாந்த் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். கொள்ளைக்கான திட்டத்தைத் தீட்டுவதில் மீனாட்சி முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதேபோல், கொள்ளையின் போது நிஷாந்த் அணிந்திருந்த உடைகள் மற்றும் தடயங்களைத் தங்கள் விவசாய நிலத்தில் வைத்து எரித்து அழிக்கத் தந்தை சுரேஷ் உடந்தையாக இருந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை

மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், ஆட்டோ சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்தும் சோதனை நடத்திய போலீசார், மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள 25 வயதான நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு பகலாகத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நிஷாந்தின் செல்போன் சிக்னல் கடைசியாகத் திருப்பூரில் காட்டியது. அங்கு முன்பின் தெரியாத ஒரு நபரின் செல்போனை வாங்கித் தனது காதலி மீனாட்சிக்கு நிஷாந்த் போன் செய்து பேசியுள்ளார். அந்த ஒரு அழைப்புதான் மீனாட்சியையும் சுரேஷையும் போலீசாரிடம் சிக்க வைத்தது.

செல்போன் நெட்வொர்க் டேட்டா

தன்னைப் போலீசார் தீவிரமாகத் தேடுவதை அறிந்துகொண்ட நிஷாந்த், போலீசாரிடம் சிக்காமல் இருக்கத் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். செல்போன் நெட்வொர்க் டேட்டா மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் அவரின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் சேலம், கோயம்புத்தூர் ஆகிய தமிழக நகரங்களிலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டுத் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நிஷாந்தின் நடமாட்டம் குறித்த முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளதால், போலீசார் அவரை மிக நெருங்கிவிட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் நிஷாந்த் கைது செய்யப்பட்டு, மீதமுள்ள நகைகளும் முழுமையாக மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+