அந்தப் பக்கம் எய்ம்ஸ்.. இந்தப் பக்கம் டைடல் பார்க்.. பரபரக்கும் தூங்கா நகரம்.. மதுரையே மாறப்போகுது!
மதுரை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதன்பின் கடந்த மதுரை வந்த அவர், தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
இன்னொரு பக்கம் திமுக பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தியது. அதேபோல் இம்முறை தென் மாவட்டங்களில் கூடுதல் இடங்களை வெல்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனிடையே மதுரை வந்த அமித் ஷாவிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை பார்வையிட்டீர்களா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

எய்ம்ஸ் 3டி வீடியோ
இதன்பின் அடுத்த நாளிலேயே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், 3டி வீடியோ வெளியிடப்பட்டது. மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் வரவுள்ளது, அது எப்படி இருக்கும், அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ மதுரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
திமுக vs பாஜக
இதனைத் தொடர்ந்து பாஜகவினர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வீடியோ வெளியாகி இருப்பதால், திமுகவினர் அச்சத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகளை தமிழக அரசு வேகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் பணிகள் 2 கட்டங்களாக நடந்து வருகின்றன.
டைடல் பார்க் பணிகள்
இதன் முதற்கட்ட பணிகள் 2026ல் முடிவடையும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக டைடல் பார்க் முதற்கட்ட பணிகளை முடிக்க தமிழக அரசு மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோரிப்பாளையம் பாலக் கட்டுமான பணிகள் சுமார் 50 சதவிகிதம் வரை முடிக்கப்பட்டுள்ளது.
2026ல் திறக்கப்படுமா?
அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரியில் முடிவடைந்து திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் டைடல் பார்க் முதற்கட்ட பணியை முடித்து திறக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மதுரை இரு பக்கங்களிலும் இரு முக்கிய திட்டங்களின் பணிகள் தீவிரமாக நடந்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications