மதுரையில் துள்ளிய 91 ஆடுகள்.. அண்டா அண்டாவா ஆட்டுக்கறி.. ஐந்துமுழி அழகிக்கு சர்க்கரை தந்த இஸ்லாமியர்
மதுரை: மதுரை மேலூரில் நடைபெற்ற, ஆடி மாதம் படையல் நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.. மேலூர் வீரசூடாமணிபட்டியில் நடந்த விழாவின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
வீரசூடாமணிபட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் ஆடி மாத திருவிழா என்றாலே, மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது.. இந்த விழாவுக்காக பக்தர்கள் ஒரு வாரம், காப்பு கட்டி விரதமிருந்து, இதனை கொண்டாடுவார்கள்..

8வது நாள், நேர்த்திக்வேண்டி காணிக்கை தரப்படும்.. கோயில் வீட்டு முன்பு மண்பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து, அதன் மீது வேப்ப இலைகளை போட்டு அவிப்பார்களாம்.. ஆனால் இதில் உப்பு சேர்க்க மாட்டார்கள்.
அம்மன் படையல்: இதற்கு பிறகு அம்மனுக்கு இந்த படையல் வைப்பார்கள். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அம்மனுக்கு இந்த படையல் வைக்கப்படுகிறது. வேப்பிலையை போட்டு சமைத்து, அம்மனுக்கு படையல் இட்டாலும் அது கசக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல, ஆடு, சேவலை வெட்டியதுமே, அங்குள்ள பெரிய கண்மாயில் அதன் ரத்தத்தை கரைப்பார்கள். இதனால் மழை பெய்து கண்மாய் நிரம்பும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மதநல்லிணக்கம்: இந்த திருவிழாவின் இன்னொரு சிறப்பு, மதநல்லிணக்கம் திகழ்கிறது. இஸ்லாமியர்கள் இந்த படையலுக்காக காணிக்கை தருவார்களாம்.. படையலுக்கு முன்பு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சர்க்கரையை, இஸ்லாமியர்கள் "சர்க்கரை வழங்கும் பாறையில்" வைத்து தொழுகை நடத்தி, அதற்கு பிறகு பக்தர்களுக்கு வழங்குவார்களாம். இப்படி காணிக்கையாக கொடுத்தவர்களுக்கு படையலிடப்பட்ட பிரசாதம் கொடுக்கப்படும்.
நோய், நொடி இல்லாமலும், எல்லா வளமும் கிடைக்க வேண்டியும் அம்மனுக்கு பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து இந்த நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாக உள்ளது. ஆடு, சேவல் காணிக்கை கொடுத்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
காப்பு கட்டி விரதம்: அப்படித்தான் இந்த வருடமும் வீரசூடாமணிபட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றது.. இதனை முன்னிட்டு 8 நாட்கள் மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 8வது நாளான நேற்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற கச்சிராயன்பட்டி, வீரசூடாமணி பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 91 ஆடுகள், 566 சேவல்களை பலியிட்டார்கள்..
பிறகு, அங்கிருந்த மண்பானையில் ஆடுகள், சேவல் கறியை வைத்து, அதன்மீது வேப்ப இலைகளை வைத்து, உப்பு சேர்க்காமல் அவித்து அம்மனுக்கு படையலிட்டனர்.
காணிக்கை: முன்னதாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிராமம் சார்பில் வாங்கிய சர்க்கரையை பால்குடி ஜமாத் தலைவர் அப்துல்காதர் தலைமையில் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பிறகு பக்தர்களுக்கு வழங்கினர். காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையிலிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.. வீரசூடாமணிப்பட்டி, சுந்ததராஜ்புரம் உள்ளிட்ட பகதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.. நூற்றுக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினார்கள்..












Click it and Unblock the Notifications