மாமனாருக்காக மதுரை வடக்கு தொகுதியை கேட்கும் மாணிக்கம் தாகூர்.. தளபதி கொந்தளிக்க இதுதான் காரணமா?
மதுரை: மதுரை வடக்கு தொகுதியை தனது மாமனார் ரவிச்சந்திரனுக்கு ஒதுக்க காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் காய் நகர்த்தி வருவதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தன்மானம் காக்க மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு பெறுவேன் என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக நிர்வாகி தளபதி கொந்தளித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.

மதுரை திமுக மாவட்டச் செயலாளரான கோ.தளபதியின் சொந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் பதிவிட்டது சர்ச்சையாகியது. அதற்கு முன்பாக மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சியை தளபதி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கான பதிலாக மாணிக்கம் தாகூர் இப்படி பதிவிட்டதாக பார்க்கப்பட்டது.
ஆனால் மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பின்னணியில் பல திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சட்டசபைத் தேர்தலில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன். அதில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றார்.
ஆலாத்தூர் ரவிச்சந்திரன் 48,182 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்த ஆலாத்தூர் ரவிச்சந்திரன் மாணிக்கம் தாகூரின் மாமனார் ஆவார். இதனால் தனது மாமனாருக்காக மதுரை வடக்கு தொகுதியை கேட்டு டெல்லியில் காய் நகர்த்துவதாக தெரிய வந்துள்ளது. இதனை திமுக நிர்வாகி தளபதி முன்கூட்டியே அறிந்துதான், மாணிக்கம் தாகூரை விமர்சித்திருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர்.
மேலூர் தொகுதி அதிமுகவுக்கு பலம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இதன்பின் மதுரை வடக்கு தொகுதியில் கோ.தளபதி போட்டியிட்டு வென்றார். இம்முறை இரட்டை இலை சின்னத்தில் அதிமுக நிர்வாகி சரவணன் போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் சிட்டிங் எம்எல்ஏ-வான தளபதி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் குடும்ப உறுப்பினருக்காக மாணிக்கம் தாகூர் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுகவினார் விமர்சித்து வருகின்றனர். இதனால் மதுரை மாவட்ட திமுகவில் மாணிக்கம் தாகூர் மீது கடுமையாக அதிருப்தி நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications