பிரம்மாண்ட பந்தல்.. மெகா கறி விருந்து, 50 மொய் கவுன்டர்கள்.. இது அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா
மதுரை: பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மகனுக்கு மதுரையை வியந்து பார்க்கும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாகத் திருமண விழா நடந்தது.
மதுரை மாவட்டத்தில் திமுகவின் முக்கிய நபர்களில் ஒருவர் பி.மூர்த்தி. நீண்டகால திமுக உறுப்பினரான இவர், மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
கடந்த 2006இல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அதன் பின்னர் 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அமைச்சர் மூர்த்தி
கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்த போது, மூர்த்திக்குப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும், மதுரை திமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இவர் உள்ளார். மதுரை மாவட்ட திமுகவில் முக்கிய நபரான அமைச்சர் மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷூக்கும் ஸ்மிர்தவர்ஷினிக்கும் இன்று மதுரையே வியக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாகத் திருமண விழா நடைபெற்றது.

பிரம்மாண்டம்
பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் திருமணம் நடந்தது. அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விவாவுக்கான ஏற்பாடுகள் கடந்த இரு மாதங்களாகவே பாண்டி கோயில் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதை அமைச்சரும் அவ்வப்போது நேரில் சென்று கவனித்து வந்தார். கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில், மாநாடு போல ஒரு லட்சம் பேர் அமரும் பந்தல், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இது தவிர விஐபிகள் சாப்பிடத் தனியாக டைனிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருமணம்
இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த திருமண விழா நடந்தது. ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க அமைச்சர் மூர்த்தியின் தியானேஷ் மணமகளுக்குத் தாலி கட்டினார். இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், பல திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் அமைச்சர் மூர்த்தியின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

மொய் கவுண்டர்கள்
மேலும், மொய் வசூலிக்க என்று தனியாகவே சுமார் 50 ஹைடெக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. பணம் எண்ணும் இயந்திரம், லேப்டாப் எனக் கச்சிதமாக அமர்ந்து அவர்கள் மொய் வசூலித்தனர். விஐபிக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் அமைச்சர் இல்ல திருமண விழாவுக்கு மொய் கொடுத்தனர்.

உணவுகள்
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு விருந்துகள் அளிக்கப்பட்டன. சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு என தனித்தனியாகப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2000 ஆடுகள், 5000 கோழிகள் வைத்து பிரியாணி உள்ளிட்ட அசைவ வகைகள் பரிமாறப்பட்டன. உணவைத் தயாரிக்க மட்டும் சுமார் 750 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.

வியந்த மதுரை
மேலும், அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் பல நூறு பேர் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு தாம்பூலப்பைகளும் வழங்கப்பட்டன. மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் மதுரையே வியக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழா இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications