மக்கள் கொடுத்த முழு மதிப்பெண்..இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில்..அமைச்சர் உதயநிதி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : அரசின் சேவைகளை மக்கள் தேடிப் போன காலம் மாறி, இன்று அரசே உங்களைத் தேடி வந்து திட்டங்களை எல்லாம் வழங்கி வருகிறது எனவும், இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முக்கிய இடத்தில் இருக்கு. உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரியில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1013 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் கடன் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 25,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.298 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

udhayanidhi stalin dmk madurai


நிகழ்ச்சியில் பேசிய அவர்,” மதுரைக்கு எப்போது வந்தாலும் ஒரு உற்சாகம் ஏற்படும். அதுக்கு காரணம், மதுரை மக்களின் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் தான். 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மதுரையிலிருந்து தான் தொடங்கினேன்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, விருதுநகர், தேனி மக்களவைத் தொகுதிகளுக்கு எல்லாம் வந்து உங்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். இந்த மூன்று தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைத் தருவோம் என்று தெரிவித்தீர்கள். சொன்னது போல மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். அதுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்மோட திராவிட மாடல் அரசுக்கான நற்சான்றிதழாக, தமிழ்நாட்டு மக்கள் 40-க்கு 40 தொகுதிகள் வெற்றி பெற வச்சு, நம்ம அரசுக்கு முழு மதிப்பெண் கொடுத்துள்ளார்கள்.

udhayanidhi stalin dmk madurai

இந்த வெற்றி, உங்களுக்காக இன்னும் கூடுதலா உழைக்க வேண்டும். பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்கிற பொறுப்பை எங்களுக்கு அதிகப்படுத்தி உள்ளது. அதனடிப்படையில் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மதுரையில் இவ்வளவு பெரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்துகிறோம். இங்கே நடப்பது அரசு விழாவா இல்ல மதுரை சித்திரை திருவிழாவா என்று கேட்கிற அளவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உள்ளார்கள்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அமெரிக்காவில் சென்றிருந்தாலும், அவருடைய எண்ணம் எல்லாம். தமிழ்நாட்டைப் பற்றியும், மதுரையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் தான் இருக்கும். உழவர் சந்தை, சமத்துவபுரம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தன்னுடைய ஆட்சி காலத்தில் மதுரையில் தான் தொடங்கி வைத்தார்கள்.

udhayanidhi stalin dmk madurai

அரசின் சேவைகளை மக்கள் தேடிப் போன காலம் மாறி, இன்று அரசே உங்களைத் தேடி வந்து திட்டங்களை எல்லாம் வழங்கி வருகிறது. அதுமட்டுமில்ல, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, தொழில் உற்பத்தி -சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் நம்முடைய அரசால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. வங்கிக் கடன் இணைப்பை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும், முந்தைய வருடத்தோட அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 30 ஆயிரத்து 75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று மதுரையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும், மொத்த 31 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் சகோதரிகளுக்கு, 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இணைப்பை வழங்குகிறோம். மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். சென்னையில் தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நம் முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக்குழு சார்பில் பல்வேறுக் கூட்டங்களை நடத்தி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தோம்.

அதனடிப்படையில், சென்னையில் மட்டும் 2 மாதங்களில் 40 ஆயிரம் பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டோட பண்பாட்டுத் தலைநகர் மதுரையில 12 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. மகளிரின் சுதந்திரத்தை பொருளாதார உறுதி செய்ய வேண்டும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை தந்து வருகிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளே மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பேருந்து பயண திட்டத்துக்குத் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டார்கள். அந்தத் திட்டம் மூலம் 520 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளார்கள். குறிப்பா இந்த மதுரையில மட்டும் 21 கோடி பயணங்கள் மேற்கொண்டு மகளிர் பயனடைந்துள்ளார்கள்.

udhayanidhi stalin dmk madurai


புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளியில படிக்கிற மாணவிகள், உயர்கல்வி சேரும் போது அவங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி சேரும் போதும் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை திட்டத்தை வழங்குகிற நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்துள்ளார்கள். மாநில அளவில் இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக, கிட்டத்தட்ட 7 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு, இந்த ஒரு வருடத்தில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய்னு, தலா 12 ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் 4 லட்சத்து 62 ஆயிரம் மகளிர் பயனடைந்து வருகிறார்கள்.

இத்தகைய திட்டங்களால், தமிழ்நாட்டு மகளிர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். இந்திய அளவுல பணிக்கு செல்லும் மகளிர், 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கு நம்முடைய திராவிட அரசின் திட்டங்கள் தான் காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முக்கிய இடத்தில் இருக்கு. உயர்கல்வி சேருகிற மாணவர்களின் சராசரியில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 50 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்ட முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தைக் கொண்டது நம் தமிழ்நாட்டுக் கல்விமுறை தான். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்ற பகுத்தறிவோட கேள்வி கேட்க சொல்லித்தர்ற தமிழ்நாட்டு கல்விமுறை. இன்னைக்கு சில பேரோட கண்களை உறுத்துகிறது. அதைப்பற்றி நமக்கு கவலை இல்ல. நம் மாணவர்களின் முன்னேற்றம் தான் முக்கியம் என்று, நம் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப்பள்ளியில படிச்சு வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்கப் போற மாணவர்களோட முதல்பயணச் செலவு, முதல் ஆண்டுக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இந்த திட்டங்களின் காரணத்தால், தமிழ்நாடு அரசு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை இடத்தில் இருக்கிறது. இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பே புள்ளி விவரத்தோடு சொல்லியுள்ளது. மாணவர்கள், மகளிர், அனைத்து தரப்பு மக்களின் நன்மைக்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் தொடர்ந்து உழைக்க நம்முடைய அரசும் முதலமைச்சர் அவர்களும் நாங்களும் தயாராக இருக்கிறோம்.

மகளிருக்கு கொடுத்திருப்பது வெறும் கடன் தொகை மட்டுமல்ல. அதனை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்க உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கைத் தொகையாகத் தான் பார்க்கிறார்கள். வங்கிக்கடன் பெற்றுள்ள ஒவ்வொருத்தரும் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். மகளிர் சில பேருக்கு தொழில் தொடங்க ஒரு தயக்கம் இருக்கும். இதுபற்றி கலைஞர் அவர்கள் கூறிய ஒரு விஷயத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீச்சல் கத்துகிட்ட பிறகு தான் ஆத்துல இறங்கி நீச்சல் அடிப்பேன்னு சொன்னா, ஒரு நாளும் நீச்சல் கத்துக்க முடியாது. எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் மகளிர் நீங்கள், தொழில் முனைவோர் ஆகிட துணிச்சலோடு செயல்பட்டிட வேண்டும். உங்களுக்கு எல்லா வகையிலும் நம் கழக அரசு துணை நிற்கும். துணிச்சலோடு முன்னேறிச் செல்லுங்கள்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+