நான் அமைச்சராக்கும்! பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் நழுவிய "கதர் சட்டை" விஸ்வநாதன்
மதுரை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் பெ.விஸ்வநாதன் என்ன பதில் சொன்னார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், நான் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருக்கிறேன். எங்கள் அரசு கூட்டணி அரசு.

அமைச்சரின் பொறுப்பு அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்பதுதான். நான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தால் எனது கருத்து வேறாக இருந்திருக்கும். எனவே பட்டினப்பாக்கம் குறித்து எங்கள் கட்சி தலைவரிடம்தான் கேட்க வேண்டும்.
நான் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர். அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் அமைச்சர். எனவே அமைச்சர் என்ற முறையில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை நான் வரவேற்கிறேன். இவ்வாறு பெ.விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறையால் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். புதிய தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் அங்கு தலைமைச் செயலகம் அமைத்தால் கடும் கூட்டநெரிசல் ஏற்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். மீனவர்களின் எதிர்ப்பை மீறி அங்கு தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர். மீனவர்களுக்கு ஆதரவாக திமுக, அதிமுக, தேமுதிக, நாதக, பாஜக, அமமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் செயல்படுகின்றன.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு ரூ 1200 கோடியை செலவு செய்வதை விட புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தை புதுப்பித்து பயன்படுத்தினாலே இவ்வளவு பெரிய தொகை செலவாகாது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அங்குள்ள மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும். இந்த வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
