மீண்டும் “மீடியாவில்” மு.க.அழகிரி! உதயநிதியோடு உங்க மகன்.. செய்தியாளர்கள் கேள்வி - அமைதியோ அமைதி
மதுரை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது ஆதரவாளரை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நலம் விசாரித்து மருத்துவ செலவுக்கு பண உதவி செய்தார்.
முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் கட்சியில் அங்கம் வகித்தபோது குடும்ப உறுப்பினர்களுள் கடும் மோதல் ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் குடும்பத்துடன் அழகிரிக்கு ஏற்பட்ட மோதல் காரணமாகவும், அழகிரி மீது கட்சி மட்டத்திலும், வெளியிலும் எழுந்த புகார்கள் காரணமாகவும் அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக அறிவித்தார் அழகிரி.

மு.க.அழகிரி
அதற்கு பின் சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களை அவர் தெரிவித்து வந்தார். அதன் பின்னர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் குடும்பத்துடன் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதிகாத்து வருகிறார்.

உதவிகள்
அதே நேரம் தனது ஆதரவாளர்களை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து அவர்களை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது, உதவிகள் செய்வது போன்ற காரியங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்களின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று அவர் உதவிகளை செய்து வாழ்த்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அழகிரி ஓய்வு
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று இசக்கி முத்துவை மு.க.அழகிரி நேரில் சந்தித்தார்.

நலம் விசாரிப்பு
மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள இசக்கி முத்து வீட்டுக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு தேவையான நிதி உதவியை அவர் அளித்தார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் பேட்டியெடுக்க சூழந்தனர்.

அமைதி
அவரிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா? மீண்டும் நீங்கள் திமுகவில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? உதயநிதியும், உங்கள் மகன் துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், மு.க.அழகிரி அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications