கூட்டணியா... ரஜினி கூப்பிட்டால் கூடப் போய் நடிக்கலாம்.. மு.க.அழகிரி பொளேர் பதில்!
மதுரை: மதுரையில் மு.க.அழகிரி அளித்த பேட்டியில், கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான் என்று கூறினார். தனி கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்று ஆலோசித்து வருகிறேன் என்றும் முக அழகிரி கூறினார்.

2021 சட்டபை தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான தேர்தல் ஆகும். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் அதிமுக, திமுக சந்திக்கப்போகும் முதல் தேர்தல் ஆகும்.
இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ் ஒரு அணியாகவும் உள்ளன. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். திமுக கூட்டணியில் முக ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். இருவரில் யார் தலைமையில் ஆட்சி நடக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினி தனிக்கட்சி
இதனிடையே இந்த தேர்தலில் புதிதாக ரஜினிகாந்த் களம் இறங்கி உள்ளார். ஜனவரி மாதம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். இதேபோல் அவரது நண்பரும், நடிகருமாகிய கமல் ஹாசனும் தனித்து களம் இறங்க உள்ளார். இது தவிர சீமான் தனியாக களம் காண உள்ளார். ரஜினி யாருடன் கூட்டணி அமைப்பார். அல்லது தனித்து களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை.

என்ன முடிவு
இப்படி பலமுனைபோட்டிகள் உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மதுரை தொகுதியின் முன்னாள் எம்பியுமான மு.க.அழகிரி, தனி கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகனாகிய அழகிரி கட்சி தொடங்கினால், அது திமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அழகிரி மறுப்பு
இந்த சூழலில் அண்மைக் காலமாக அழகிரி குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. அவர் பாஜகவில் இணையப் போவதாக, ரஜினியுடன் சேரப் போவதாக என பல ஊகங்கள் பரவின. இவற்றை எல்லாம் முக அழகிரி திட்டவட்டமாக மறுத்தார். எனினும் தனி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மட்டும் இதுவரை எந்த மறுப்பும் அவர் கூறவில்லை.

அழகிரி பதில்
இந்த சூழலில் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு முக அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், செய்தியாளர்கள் சட்டசபை தேர்தலில் உங்கள் பங்களிப்பு இருக்குமா? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி:வாக்களிப்பதுதான் என் பங்களிப்பு,. கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது கூட தேர்தல் பங்களிப்புதான் என்றார்.

ஆலோசனை
தனி கட்சி தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு. தொண்டர்களுடன் ஆலோசனை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார். ரஜினியுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். அவர் புதிய படத்தில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். கட்சி தொடங்க இருக்கும் ரஜினிக்கு ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டேன்" என்றார்.