நிஷாந்த் கைது.. மதுரை போலீஸுக்கே தண்ணி காட்டிய கொள்ளையன்.. ஐந்து நாட்களில் சிக்கினார்
மதுரை: மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காதலியும், தந்தையும் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மட்டும் இடத்தை மாற்றி மாற்றி பதுங்கி வருகிறார். 4 நாட்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததால், தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை கடைக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். கடையை திறக்க வந்த ஊழியர்கள் நகைகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புதிய நகைக்கடையில் ரூ.21 கோடி கொள்ளை
விசாரணையில் சுமார் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
முகத்தை மறைத்துக்கொண்டு, உடல் முழுவதும் கருப்பு துணியை சுற்றியபடி வந்த அந்த நபர் தனி ஒருவனாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மதுரை பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷின் மகன் நிஷாந்த் (25) என்பது தெரியவந்தது.
காதலியும் தந்தையும் கைது
நிஷாந்தை பிடிக்க போலீசார் அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் தனது காதலியான மீனாட்சியுடன் பேசியது தெரியவந்தது. மதுரையை சேர்ந்த மீனாட்சி (23), இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்... கொள்ளைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் மீனாட்சிக்கு சொந்தமானது. கொள்ளை திட்டத்திலும் அவருக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மீனாட்சியையும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் மீட்டனர்.
ஒரே காலேஜில் படித்த காதல் ஜோடி
நிஷாந்துக்கும் மீனாட்சிக்கும் கல்லூரியில் படித்தபோதே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேருமே மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளனர். பிறகு நிஷாந்த் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
2 பேரும் சேர்ந்து "மீனாட்சி நாச்சியார்" என்ற பெயரில் யூடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளனர். நிஷாந்த் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீனாட்சியின் வீட்டைக் கட்டி முடிக்கவும், அதற்காக ஏற்பட்ட கடனை அடைக்கவும் நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காரணத்துக்காகவே இவ்வளவு பெரிய கொள்ளையை அவர் திட்டமிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பல நாட்கள் பிளான் போட்ட நிஷாந்த்
நகைக்கடைக்குள் எப்படி நுழைவது என்பதை நிஷாந்த் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார். இதற்காக பலமுறை கடைக்குச் சென்று அங்குள்ள வழிகளை நோட்டமிட்டுள்ளார். குறிப்பாக, நவம்பர் 5-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் லிஃப்ட் பராமரிப்பு பகுதி வழியாக உள்ளே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதையடுத்து நவம்பர் 12-ம் தேதி மீண்டும் வந்த அவர், லிஃப்ட் பராமரிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய கதவு வழியாக உள்ளே சென்றுள்ளார். பின்னர் லிஃப்டுக்காக வைக்கப்பட்டிருந்த கயிறு வழியாக கீழே இறங்கி, நகைக்கடை இருந்த முதல் தளத்தை அடைந்துள்ளார்.
கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர் மாடக்குளம் கண்மாய் அருகே உள்ள குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் அவற்றைப் புதைத்து வைத்துள்ளார். கொள்ளையின்போது அணிந்திருந்த உடைகள், கையுறைகள் உள்ளிட்டவற்றையும் அங்கேயே எரித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
5 நாட்கள் தலைமறைவு.. நிஷாந்த் சிக்கியது எப்படி?
காதலியும், தந்தையும் போலீசாரிடம் சிக்கிய நிலையில், நிஷாந்த் மட்டும் தொடர்ந்து இடம் மாறி வந்துள்ளார். ஒரே இடத்தில் தங்காமல் பல்வேறு ஊர்களுக்குச் சென்ற அவர், பரமக்குடி, கேரளா, கோவை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மாறு வேடத்தில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் செல்லும் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஓட்டுநர், செல்போனில் வெளியான நிஷாந்தின் புகைப்படங்களைப் பார்த்து அவரை அடையாளம் கண்டுள்ளார்.
உடனே அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பேருந்தின் ஜிபிஎஸ் இருப்பிடத்தை கண்காணித்த போலீசார், தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டி பகுதியில் பேருந்தை வழிமறித்தனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற நிஷாந்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இவ்வாறு 5 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் பல்வேறு இடங்களில் சுற்றி வந்த நிஷாந்த், கடைசியில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
நகைக்கடைகளின் பாதுகாப்பு எங்கே?
புதிதாக திறக்கப்பட்ட ஒரு பெரிய நகைக்கடையிலேயே ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, கடைக்குள் நுழையும் வழிகளை முன்கூட்டியே நோட்டமிட்டு, பல நாட்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை நடந்துள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு நேரங்களில் நகைக்கடைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கிறதா, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகின்றனவா, அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்விகளையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
ரூ.21 கோடி கொள்ளை வழக்கில் ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நிஷாந்தின் காதலியும், அப்பாவும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியான நிஷாந்தும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த கொள்ளைக்கான திட்டம் எப்படி தீட்டப்பட்டது, வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த கேள்விகளுக்கு நிஷாந்திடம் நடத்தப்படும் விசாரணையில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
