'ஓரணியில் தமிழ்நாடு' - ஆதார் விவரங்களை கேட்டு திமுகவினர் மிரட்டுவதாக வழக்கு
மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவித்திருந்தார். இதன் உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை கேட்டு திமுகவினர் மிரட்டுவதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வரும் நிலையில் இப்பணியின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்கள் கேட்டு மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தி வருகிறது. இப்பணிகளுக்காக திமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
மேலும், மக்களின் அனுமதி பெறாமலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என்று அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டிச் செல்கின்றனர். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை மக்களிடம் கேட்கின்றனர்.
ஆவணங்களை தர மறுத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிறுத்திவிடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனர். தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி திமுகவில் சேர்த்து வருகின்றனர்.
திமுகவில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறும் செயலாகும்.
பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications