ஓரணியில் தமிழ்நாடு.. மக்களிடமிருந்து ஓடிபி பெற தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்திருந்தார். இந்நிலையில், திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக மக்களிடமிருந்து ஓடிபி கேட்டு பொதுமக்கள் மிரட்டப்படுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்களிடமிருந்து ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ளார். மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வரும் நிலையில் இப்பணியின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்கள், ஓடிபி கேட்டு மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கையில், திமுகவினர் வீடு வீடாகச் சென்று, மக்களிடமிருந்து வாக்காளர் அட்டை விவரங்களையும், ஆதார் விவரங்களையும், ஓடிபி எண் பெற்று ஓரணியில் தமிழ்நாடு செயலியில் பதிவேற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தி வருகிறது. இப்பணிகளுக்காக திமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.
மேலும், மக்களின் அனுமதி பெறாமலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என்று அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டிச் செல்கின்றனர். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை மக்களிடம் கேட்கின்றனர்.
ஆவணங்களை தர மறுத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிறுத்திவிடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனர். தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி திமுகவில் சேர்த்து வருகின்றனர். திமுகவில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமையை மீறும் செயலாகும்.
பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது மக்களிடமிருந்து ஓடிபி பெறுவதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என்று கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தனிபரின் தரவுகள் டிஜிட்டல் முறையில் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களிடம் திமுகவினர் எதற்காக ஓடிபி கேட்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பொதுமக்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது என்றும், இவ்வாறு சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கான விவரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications