பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையம் முதல் காந்தி கிராமம் வரை சாலை மார்க்கமாக போலீஸ் ஒத்திகை!
மதுரை: பிரதமர் மோடி நாளை திண்டுக்கல் காந்தி கிராமம் வருகை தருகிறார். இதனையொட்டி மதுரை விமான நிலையம் முதல் காந்தி கிராமம் வரை சாலை மார்க்கமாக போலீசார் இன்று ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36 ஆவது பட்டமளிப்பு விழா நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இந்த விழாவிற்காக 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜிபி ஆய்வு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று விழா நடைபெறும் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். பின்னர் பாதுகாப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார்.

ஒத்திகை நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் வருகைக்கான ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

மதுரை- காந்தி கிராமம் ஒத்திகை
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்தன. அணிவகுத்து வந்த கார்கள் விழா நடைபெறும் ஆடிட்டோரியம் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வாகனங்கள் திரும்பி மதுரை விமான நிலையத்திற்கு சென்றது.

ஹெலிகாப்டர் ஒத்திகை
முன்னதாக பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்தி கிராமம் வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் கனமழை எச்சரிக்கையால் வானிலை மோசமாக இருந்தால் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சாலை மார்க்க ஒத்திகை இன்று நடைபெற்றது.












Click it and Unblock the Notifications