திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூண்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கற்பனை! காவல் துறை வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் என்பது தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கற்பனை என காவல் துறை தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் தனது வாதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை. உறுதியாக தெரியாத நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது போன்ற உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதி வரும் காலங்களில் தேர்தலில் கூட போட்டியிடலாம். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தன்று அன்று மனுதாரர்கள் பிரச்சினை செய்த போது காவல் துறையால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராமரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார் என வாதிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், அறநிலையத் துறை உள்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம், "கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அது அவருக்கான உரிமை அல்ல. கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றுவது வேறு, வீட்டில் தீபம் ஏற்றுவது வேறு.
கார்த்திகை தீபத்தை வீட்டில் தீபம் ஏற்றுவது போல் கருதுகிறார் மனுதாரர். தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது. 100 ஆணடுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நடைமுறை ஆகமவிதிபடி நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட ஆகமவிதிகளை மீறி எதையும் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சமண முனிவர்கள் இரவு நேரங்களில் ஆலோசனை செய்யும் போது அந்த பகுதியில் தூண் வைத்து வெளிச்சத்துக்காக விளக்கேற்றியுள்ளனர்.
கார்த்திகை தீபத்திற்காக அமைக்கப்பட்ட தூண் அது கிடையாது. இது போன்று மதுரையில் 4 இடங்களில் சமண முனிவர்கள் அமைத்த தூண்கள் இருக்கின்றன. இது இந்துக்களுக்கு சொந்தமான தூண் கிடையாது. இந்த வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசரமாக கையாண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மீண்டும் 3ஆவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வக்ஃபு வாரியம், காவல் துறை, மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications