ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்..அலங்காநல்லூர் வாடிவாசலில் முகூர்த்தக்கால்..முதல் பரிசு யாருக்கு?
மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்த அனுமதி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தை முதல் நாள் முதல் தொடங்கி மூன்று நாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இன்றைய தினம் ஜல்லிக்கட்டு விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். அவர்களை சுற்றுலாத் துறையினர் போட்டி நடக்கும் நாளில் அலங்காநல்லூர் அழைத்துச் செல்வர்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு அன்பளிப்புகள் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயபக்தியுடன் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகளை தங்கள் குழந்தைகளைப்போல் வருடம் முழுவதும் தினமும் பராமரித்து வளர்த்து, நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் பாலமேட்டில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, வாடிவாசலுக்கு வண்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானத்தை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications