முதலில் பிரெஸ் மீட் வைத்து விஜயிடம் கேள்விகளை கேளுங்கள்.. ஒரே போடு போட்ட பிரேமலதா விஜயகாந்த்
மதுரை: மாநாட்டில் கூறியது குறித்த அனைத்துக் கேள்விகளுக்குமே விஜய்தான் பதில் அளிக்க வேண்டும். பிரெஸ் மீட் ஏற்பாடு செய்து அனைத்துக் கேள்விகளையும் விஜயிடம்தான் நீங்கள்தான் கேட்க வேண்டும். கருத்து வேண்டுமானால் நாங்கள் கூறலாம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: திமுகவை விஜய் அரசியல் எதிரி என்று விஜய் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், மாநாட்டில் கூறியது குறித்த அனைத்துக் கேள்விகளுக்குமே விஜய்தான் பதில் அளிக்க வேண்டும்.

பிரெஸ் மீட் ஏற்பாடு செய்து அனைத்துக் கேள்விகளையும் விஜயிடம்தான் நீங்கள்தான் கேட்க வேண்டும். கருத்து வேண்டுமானால் நாங்கள் கூறலாம். ஆனால், அவர் மாநாட்டில் பேசிய அனைத்திற்குமே அவரால் மட்டுமே பதில் அளிக்க முடியும்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கருத்து என்றால், இன்றைக்கு அரசியலுக்கு வரும்போது தங்களுடைய எதிரி யார் என்பதை ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுதான் அரசியல் களத்துக்கு வருகின்றனர். அந்த வகையில், விஜயும் திமுகதான் தன்னுடைய அரசியல் எதிரி என்ற கருத்தை சொல்லியிருக்கிறார்.
எனவே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனியும் காலம் நிறைய இருக்கிறது. இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டுள்ளார். மாநாடு நடத்தி, கட்சி பெயரைச் சொல்லி கொடியை ஏற்றியிருக்கிறார். விஜய் கடந்து வர வேண்டிய பாதைகள் ஏராளம் உள்ளது. எனவே, நிச்சயமாக வரும் காலங்களில் அவருடைய செயல்பாடுகள், அவர் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகளை பொறுத்துதான் அவருடைய வளர்ச்சி இருக்கும்.
தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்பது குறித்த கேள்விக்கு, அதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிடலாம். எங்களுடைய கட்சிதான் அதற்கான பதில். கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதனை முற்போக்கு சிந்தனையுடன் கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்.
புரட்சிக் கலைஞர் கேப்டனைவிட இங்கு தமிழை நேசித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழை மிகப்பெரிய அளவில் நேசித்தவர் கேப்டன் என்பது எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். எத்தனையோ திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தைப் படைத்தவர் கேப்டன்.
அதேபோல, எல்லா விஷயங்களிலும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று அனைத்து இடங்களிலும் பேசியவர் அவர். தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மாற்று மொழியையும் பேசாதவர். அதனால், அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்றுதான் இளைஞர்களிடம் கேப்டன் கூறினார்.
எனவே, நிச்சயமாக தமிழ்தான் நமக்கெல்லாம் அன்னை, தெய்வம் எல்லாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது இன்று நேற்று அல்ல. நூற்றாண்டு காலமாக இருக்கக்கூடிய விஷயம். எனவே, இப்போது அதற்கு புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications