மதுரை ரயிலில் தீ விபத்து: பெட்டிக்குள் கியாஸ் சிலிண்டர் வந்தது எப்படி? 2வது நாளாக விசாரணை
மதுரை: மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். ரயில் பெட்டிக்குள் சிலிண்டரை வைத்து சமையல் செய்ததே விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ரயில் பெட்டிக்குள் சிலிண்டர் எந்த ரயில் நிலையத்தின் வழியாக எடுத்து வரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக பயணிகள் பலர் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் கடந்த 25 ஆம் தேதி இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை இந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஒரு ரெயில் பெட்டியை வாடகைக்கு பிடித்து 63 பேர் கொண்ட குழுவினர் தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்து இருக்கிறார்.
அதிகாலை 5.15 மணி அளவில், அந்த குழுவினருடன் வந்த சமையல்காரர்கள் ரயில் பெட்டிக்கு உள்ளேயே ஓரிடத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து டீ போட்டுள்ளனர். அப்போது தான் சிலிண்டர் வெடித்து தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நாசேவேலை எதுவும் இல்லை என்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ரயில் பெட்டியில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே, ரயில் தீ விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று விசாரணை நடத்தினார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் விசாரணை நடைபெற்றது.
இரண்டாவது நாளாக இன்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளார். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனத்தின் ஊழியர்களே சிலிண்டரை எடுத்து வந்தததாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களுக்கு சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து சிலிண்டரை ஏற்றினார்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுவரை வழக்கு யார் மீதும் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய சுற்றுலா நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேரையும் நேற்று பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், அவர்களில் சமையல்காரர்களாக இருந்த 2 பேரை இன்று விசாரணைக்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். விசாரணை இன்று மாலைக்குள் முடிவு பெறும் என்றும் அதன்பிறகு ரயில்வே தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications