மதுரை அருகே வீட்டை சுற்றி தோண்ட தோண்ட தங்கம்.. போலீசுக்கே ட்விஸ்ட் தந்த கொள்ளைக்கார குடும்பம்
மதுரை: மதுரை அருகே பல வீடுகளை கொள்ளை அடித்து, வீட்டை சுற்றி 180 சவரன் நகைகளை புதைத்து வைத்த கொள்ளைக்கார குடும்பத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த குடும்பத்தினர் குறித்து போலீஸார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சிலைமான், கருப்பாயூரணி உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றிய பகுதிகளில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் கும்பல், அங்கிருக்கும் பணம், நகைகளை எடுத்து சென்றுவிடுகிறார்கள். அப்படி 20க்கும்மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. அதுவும் எப்படி என்றால் எல்லா குற்றச்சம்பவங்களிலும் தடயங்கள் ஒரே மாதிரி இருந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவங்கள் ஒரே கும்பலே நிகழ்த்தி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாந்த் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சிலைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், குமரகுரு உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை சுற்றி அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று, கொள்ளையர்களை பற்றி மறைமுகமாக விசாரித்தனர். கொள்ளை கும்பல் குறித்து ஏதாவது துப்புக்கிடைத்துவிடாதா என்று தேடிய டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசாருக்கு ஒரு விஷயம் பொறி தட்டியது. கொள்ளை நடந்த இடத்தில் ஒரு வயதான பெண் வந்ததும், அவர்களுடன் 3 இளைஞர்கள் அப்பாவி போல் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பல் புதன்கிழமை அன்று கல்மேடு பகுதி வழியாக பயணித்ததும். மீண்டும் கொள்ளையில் ஈடுபட போவதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கல்மேடுபகுதயில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். சோதனையில் இரு இளைஞர்கள் வாகனத்தில் ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் ஓரளவு இவர்கள் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தநிலையில், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை கும்பல் இவர்கள் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் மதுரை மாவட்டம் இளமானூர்புதுரைச் சேர்ந்த சின்னச்சாமி(வயது 25) என்ற நரி என்பதும், மற்றொருவர் அவரது சகோதரர் சேனைச்சாமி (23) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன் பெரிய கருப்பசாமி (27), பெரியம்மா ஆசை பொண்ணு (65) ஆகியோர் குடும்பமாக சேர்ந்து கடந்த 3 வருடங்களாக பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சோனைச்சாமி(23), இவர்களது பெரியம்மா ஆசைபொண்ணு (65), இவரது மகன் பெரிய கருப்பசாமி (27) ஆகியோர் என தெரியவந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களுடைய வீடுகளுக்கு சென்று நகைளை பறிமுதல் செய்ய முயன்றனர்,.ஆனால் நகைகள் இல்லை. ஆனால் போலீசார் அதிரடியாக விசாரித்த பின்னர், நகைகளை வீட்டை சுற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மண்வெட்டியால் வெட்டி எடுத்து 180 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 9 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 240 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்ததும், கொள்ளையடித்த பணம் நகைகளை பயன்படுத்தி வீடு மற்றும் வாகனங்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வீடு மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications