ரூ.1,000 கோடி மோசடி நடந்துருக்கு.. மதுரையில் 3-வது நாளாக குவியும் புகார் மனுக்கள்.. 30,000 தாண்டியது
மதுரை: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.50 ஆயிரம் முதல் பல லட்சங்களை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு இடங்களில் 3-வது நாளாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புகார் மனு அளித்துள்ளனர். இதனால் இந்த மோசடியில் 1000 கோடிக்கு மேல் பணம் சுருட்டப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வசித்து வரும் பல்வேறு நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் முதலீடு செய்தால் அதில் இரட்டிப்பாக பணம் திரும்ப வரும் என்று கூறி எஃப்.கியூ.எல். நிறுவனம் என்ற பெயரில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நூதன மோசடி
செல்போன் செயலி ஒன்றை இன்ஸ்டால் செய்ய சொல்லி, அதில் பணத்தை முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஏஜெண்டுகள் மூலம் பொதுமக்களிடம் கூறி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். இதனை நம்பி, மதுரை மாவட்டம் மேலூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், சிங்கம்புனாரி என அப்பகுதிகளை சுற்றியுள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதில் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே இதில் பலரும் முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது அந்த செயலியில் சொன்னது போல பணம் இரட்டிப்பு ஆகவில்லை. இது தொடர்பாக நிறுவன ஏஜெண்டுகளிடம் கேட்டபோது அவர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் நேற்று முன் தினம் மதுரை - சென்னை 4 வழிச்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 ஆயிரம் பேர் மனு
மேலும் சில இடங்களிலும் இதில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்க வசதியாக மதுரையில் மட்டும் 3 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நேரடி மேற்பார்வையில் பொதுமக்கள் புகார் அளிக்க இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் நீண்ட நேரம் காத்து கிடந்து புகார் மனு அளித்தனர்.
நேற்று மதுரையில் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் முகாம் நடந்தது. இதே போன்று சிவகங்கை, திண்டுக்கல்லிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. அப்போதும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து மனு அளித்தனர். இதில் 2 நாட்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புகார் மனு அளித்தனர். இன்று 3 வது நாளாக சிறப்பு முகாம்கள் நடந்தன. இன்றும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுவரை 30,000-க்கும் அதிகமானோர் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மனுக்கள் அளித்து வருவதால் இச்சம்பவத்தில் 1,000 கோடிக்கு மேல் மோசடி அரங்கேறி இருக்கும் என கூறப்படுகிறது.
எப்படி இந்த மோசடி நடைபெற்றது?
பணத்தை இழந்தவர்கள் கூறுகையில், "பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய இடைத்தரகர்கள் பலர் ரூ.50 ஆயிரத்தை முதலில் வாங்கிக்கொண்டு செல்போன்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்தனர். அவர்கள் சொல்வதை கேட்டு பிறகு நாங்கள் சேமிக்கும் பணத்தை இதில் முதலீடு செய்தோம்.. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்து இருந்தோம். இதற்கு எங்கள் பணம் அனைத்தும் அமெரிக்க டாலர்களில் தங்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக கூறினர்.
புகார் மனுக்கள் ஒரு லட்சத்தை தாண்டும்
மேலும் எங்களை நம்ப வைப்பதற்காக அதற்கான அசல் ஆவணம் போல சிலவற்றை அனுப்பினார். ஆனால் திடீரென கடந்த 27 ஆம் தேதி செயலிகள் முடக்கப்பட்டன. வங்கி கணக்குகளை பார்த்தபோது பணம் இல்லை. இதற்கு பிறகு தான் இது மோசடி என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 100 கோடிக்கு மேல் இந்த மோசடி நடைபெற்று இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய முகாம்கள் போட வேண்டும். அரசு நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும். புகார் மனுக்கள் ஒரு லட்சத்தை தாண்டும். இந்த நூதன மோசடியில் 1,000 கோடிக்கும் மேல் சுருட்டப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
