பிப் 7ல் சசிகலா பராக்... உறுதி செய்த டிடிவி தினகரன் - யார் மன்னிப்பு கேட்கிறார்கள் என பார்க்கலாம்
பெங்களூருவில் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா சென்னைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டு காலம் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா வரும் 7ஆம் தேதியன்று தமிழகம் திரும்புகிறார். அமமுக தலைவர் டிடிவி தினகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளதோடு தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா, முதல்வராகவேண்டும் என்ற ஆசையில் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவே கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலா விடுதலை
நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலைக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிஸ்சார்ஜ் ஆன சசிகலா பெங்களூருவில் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஜெ. பயன்படுத்திய கார்
ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கட்சிக்கொடி கட்டி போன சசிகலா ஆரம்பத்திலேயே சர்ச்சையை கிளப்பியுள்ளார். பெங்களூருவில் இருந்து வரும் 7ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளார் சசிகலா. இதனை அமமுக தலைவர் டிடிவி தினகரன் உறுதி படுத்தியுள்ளார்.

வரவேற்க தயாராகும் தொண்டர்கள்
மதுரையில் இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேசிய டிடிவி தினகரன், சசிகலா தமிழகம் வரும் போது அமமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். தமிழக எல்லையில் இருந்து தொண்டர்கள் அமைதியான முறையில் வரவேற்பு கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

பொறுத்திருந்து பார்க்கலாம்
டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று கே.பி முனுசாமி கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த டிடிவி தினகரன், சின்னம்மா வந்த பிறகு யார் மன்னிப்பு கேட்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று சொன்னார்.

பரபரப்பு அதிகரிப்பு
சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதியன்று சசிகலா வந்த பின்னர் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதே என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications