"ரத்தம்" படிந்த ஆடைகள்.. குப்பை தொட்டியில் போட்ட போலீசார்! சாத்தான்குளம் வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்
மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை படுகொலை சம்பவத்தில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை காவலர்கள் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை சட்ட விரோதமாக காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

படுகொலை
காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் இந்த விவகாரத்தைப் பெரியளவில் கையில் எடுத்தது. இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினர்.

கைது
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 பேர் கைதாகினர். மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ ஏற்கனவே 2,027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையில் இப்போது சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

கூடுதல் குற்றப்பத்திரிக்கை
இந்தச் சூழலில் சிபிஐ தரப்பில் இப்போது 400 பக்கங்கள் அடங்கிய கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா, கோவில்பட்டி சிறையில் இருந்த கைதி ராஜாசிங் ஆகியோர் இரு புது சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சித்ரவதை
கடந்த 2020 ஜூன் 16ஆம் தேதி மாலை தூத்துக்குடி காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜையும், பென்னிக்சையும் போலீசார் சட்டவிரோதமாக அழைத்துச்சென்று, காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு போலீஸ் நிலைய சுவர்கள் மற்றும் பொருட்களில் தெறித்துள்ளது.

கொடூரத்தின் உச்சம்
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு எதிராக ஒரு பொதுவான நோக்கத்துடன் போலீசார் குற்றவியல் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். அவர்களின் ஆடைகளில் இருக்கும் ரத்தக்கறை நீதிமன்றத்தில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவர்கள் உடையை போலீசார் மாற்றி உள்ளனர். இருவரின் ரத்தம் படிந்த ஆடைகளை போலீசார் குப்பத்தொட்டியில் வீசியுள்ளனர்.

ரத்த கறை ஆடைகள்
காவல் நிலையத்தில் சுவர்களில் தெறித்த ரத்தத்தைப் படுகாயங்களுடன் அவதிப்பட்ட இருவரை வைத்தே போலீசார் சுத்தப்படுத்தி உள்ளனர். இருப்பினும், சுவர் மற்றும் லத்திகளில் இருந்த ரத்தக்கறை தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் போலீசார் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரையும் சட்ட விரோதமாக அழைத்துச் சென்று துன்புறுத்தியுள்ளது உறுதியாகி உள்ளது என்றும் போலீசார் அவர்களுக்கு எதிராக குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகவும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications