கர்நாடக அரசுக்கு செல்லூர் ராஜூ கண்டனம்! ஆட்சிப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் காங்.க்கு வந்த சோதனை!
மதுரை: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று 24 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதல் கண்டனத்தை பதிவு செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினை பத்தோடு பதினொன்றாக மேடையில் நிற்க வைத்து பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டார்கள் எனவும் இதை பார்த்த போது திமுகவினருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் தனக்கு வருத்தமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்று கூட பாராமல் ஸ்டாலினை கர்நாடக அரசு நடத்திய விதம் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் கர்நாடக அரசுக்கு எந்தளவு வெறுப்பு இருக்கிறது என்பதை காட்டியிருப்பதாக கூறினார்.
முதலமைச்சரை பின் வரிசையில் தள்ளிவிட்டதற்காக கர்நாடக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தற்போது அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருவதாகவும் முதலில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தாங்கள் கவனிப்பதாகவும் செல்லூர் ராஜூ கூறினார்.
தேர்தல் கூட்டணி பற்றி பேச இன்னும் நாட்கள் இருப்பதாகவும் இதனால் இப்போதே அதைப்பற்றி பேசத் தேவையில்லை எனவும் செல்லூர் ராஜூ கூறினார்.
அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதாகவும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து திமுகவின் ''பக்க வாத்தியங்கள்'' வாய் திறக்கவில்லை எனவும் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications