என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ
மதுரை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தவெக விஜய்யை கூட்டணிக்கு அழைத்தது தொடர்பான கேள்விக்கு செல்லூர் ராஜூ டென்ஷன் ஆகியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'தவெகவினரை கூட்டணிக்கு அழைத்தீர்கள். அவர்கள் வரவில்லை என்ன நடந்தது' என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு செல்லூர் ராஜூ, "நீங்க தேவையில்லாத கேள்வியை கேட்க கூடாது. நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை. எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார். எந்த காலத்திலும் நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை.

திமுகவின் புனைவு செய்தி
இது திமுகவால் பத்திரிகை, ஊடகங்களில் புனையப்பட்ட செய்தி. எனவே எந்த காலத்திலும் அப்படி இல்லை. மக்கள், தொண்டர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்தக் கட்சி எல்லாம் அதிமுகவுடன் சேர்வதாக சொல்லி சேரவில்லையே என அதிமுக, எடப்பாடியாரின் செல்வாக்கை குறைக்க திமுக திட்டமிடுகிறார்கள்.
தவெகவினருடன் கூட்டணி என்று நாங்களோ, எங்கள் தலைவர்களோ எந்த காலத்திலும் சொல்லவில்லை. ஓபிஎஸ் செல்லா ஓட்டு. அவரைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். திமுகவில் தான் வெட்டு குத்து நடக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. அதனால் கூட்டணி கட்சியினர் மனக்கசப்புடன் தான் அங்கு இருக்கிறார்கள்.
கூட்டணியில் சலசலப்பு இல்லை
தொண்டர்கள் மனச்சோர்வடைந்துவிட்டனர். எங்கள் கூட்டணியில் சலசலப்பு இல்லை. அதைப்பற்றி ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம். தொண்டர்கள் மக்கள் பணி செய்கிறார்கள். மக்கள் எங்களுக்கு ஏகோபித்த ஆதரவு கொடுக்கிறார்கள். தேர்தலில் வெல்ல போவது அதிமுக கூட்டணி தான். அதிமுக வெறும் எதிர்க்கட்சிதான். அவர்கள் எதிர்பார்க்கும் வேறு எதுவும் இங்கு கிடைக்காது.
எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டமாக செல்வதை விட, யார் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். திமுகவுக்கு சாதகமான அதிகாரிகள் போட்டுள்ளனர். அவர்கள் தேர்தலில் திமுகவுக்கு சாதகமாக தான் பணியாற்றுவார்கள். நாங்கள் எல்லாவற்றையும் எழுதி கொடுத்து யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என்று புகார் அளிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications