உயிரை காவு வாங்கிய கழிவு நீர் விஷவாயு..மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகம் - அண்ணாமலை சுளீர்
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகம்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது? என கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன என்றும் அவர் அரசை கேட்டுள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நேரு நகரில் கழிவுநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நீக்கும் பணியில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களான மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சரவணன், கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சிவக்குமார் என்ற நபர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் சக ஊழியர்களான லட்சுமணன், சரவணன் ஆகிய இருவரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், விஷ வாயு தாக்கி மூவரும் உயிரிழந்துள்ளனர்.

உடல்கள் மீட்பு
சம்பவம் இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மூவரது உடல்களும் மீட்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆறுதல்
நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

விபத்துக்குக் காரணம்
இதனிடையே, கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளின் போது பணியாளர்களுக்கு சுவாச கருவி போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள சக தொழிலாளர்கள், உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக அண்ணாமலை
எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன? மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது? என கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை ட்வீட்
அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் , மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன் சிவக்குமார், லக்ஷ்மணன் ஆகியோர் விஷ வாயு தாக்கி ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இழப்பீடு தேவை
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தகவல் படி, இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்பு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்பது வருந்தத்தக்க செய்தி. குடும்பத்திற்கு இழப்பீடும் அரசுப் பணியும் தந்து ஆதரிக்க வேண்டும் என்று மாநில அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
