23 கிமீ தான் லிமிட்! சுங்கச்சாவடியை உடனே அகற்றுங்க.. ஐகோர்ட் உத்தரவு.. வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்
மதுரை: சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடியில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மற்றொரு சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல சுங்கச்சாவடிகள் ஒப்பந்த காலம் முடிந்தும் தொடர்ந்து கட்டணம் வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. அதுமட்டும் இன்றி விதிகளை மீறி குறுகிய தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியானது, புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளது எனவும், இது தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறி உள்ளது. எனவே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லெம்பலக்குடி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்றக்கோரியும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமி நாதன், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
லெம்பலக்குடி மற்றும் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி ஆகிய 2 சுங்கச்சாவடிகளும் நேஷனல் ஹைவே எண் 36-ல் உள்ளன. லெம்பலக்குடி சுங்கச்சாவடி 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி 2017-ம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை எங்கு அமைக்க வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.
லெம்பலக்குடி சுங்கச்சாவடி முதலில் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியே விதிகளை மீறி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications