தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்!
மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இங்கு பெரியவர்களுக்கு 30 படுக்கைகள், சிறியவர்களுக்கு 20 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
காய்ச்சல் வார்டுகளில் சிகிச்சைக்கு வந்து செல்பவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என கண்காணிக்கப்படுகிறது என்றும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை வழங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் இருந்ததை போல் தீவிரமாக இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தொடர்பான நோய், நாள்பட்ட நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications