நீதித்துறைக்கு திமுக அரசு செய்தது என்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஸ்டாலின் லிஸ்ட்!
மதுரை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீதித்துறைக்கு என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் வாசித்தார்.
1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்புதல் தரப்பட்டது உட்பட இன்னும் பல நலத் திட்டங்களை பட்டியலிட்டார்.
மதுரையில் நடைபெற்ற நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பேசியதாவது;

44 புதிய நீதிமன்றங்கள்
திமுக அரசு பதவியேற்ற 2021 மே மாதம் முதல், இன்றுவரையில், புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

4 சிறப்பு நீதிமன்றங்கள்
3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி நிலையில், கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

160 கீழமை நீதிமன்றங்கள்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு சட்டக்கல்லூரி
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க 23 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புதியதாக நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்புக் கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்குரைஞர் நல நிதி
வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி
7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சொல்ல நேரம் இடம் தராது
தமிழ்நாடு வழக்குரைஞர்களின் எழுத்தர் நலநிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய், இறந்த வழக்குரைஞர்களின் எழுத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம். அவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல நேரம் இடம் தராது.












Click it and Unblock the Notifications