கல்லூரி மாணவர்களை.. 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி?
மதுரை: தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்கல்லூரி மாணவர்களை மத ரீதியில் தூண்டும் விதமாக 'ஜெய் ஸ்ரீராம்' என மாணவர்களை முழக்கமிட வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும் வீடியோவில், ஆளுநர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட மாணவர்களை வலியுறுத்துகிறார். அவர் முழக்கமிட, அதை தொடர்ந்து மாணவர்களும் முழங்குகின்றனர்.

ஆளுநருக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் நீடித்து வருகின்றன. சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அதை ஆளுநர் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும்போது இந்த உரசல்கள் மேலும் தீவிரமடைகின்றன. சமீபத்தில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையீடு செய்து மாநில அரசுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியிருந்தது. இருப்பினும் ஆளுநர் மீதான விமர்சனத்தை தமிழக அரசு குறைக்கவில்லை.
ஆளுநர் ஆர்எஸ்எஸ் பண்புகளுடன் இருக்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்பால் உறுதிமொழி ஏற்ற ஒருவர், தனி அரசியல் இயக்கத்தின் பண்புகளுடன் எப்படி செயல்பட முடியும் என்று தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்கையில், மறுபுறம் அதை உறுதி செய்யும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று நடந்த சம்பவம் இதற்கான உதாரணமாக கூறப்பட்டிருக்கிறது.
அதாவது, மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று 'கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்' என்கிற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியின் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்றிருந்தார். பங்கேற்றிருந்தவர், அங்கு மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இறுதியாக தனது உரையை முடிக்கும்போது, நான் சொல்வதை அப்படியே திரும்ப சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை முழங்கியுள்ளார். மாணவர்களும் பதிலுக்கு முழங்கியுள்ளனர்.
ஆளுநரின் இந்த செயல், இந்துத்துவாவாதியை போன்று இருப்பதாகவும், அவர் மீதான ஆர்எஸ்எஸ் விமர்சனங்கள் உறுதியாகியிருப்பதாகவும் பலரும் கூற தொடங்கியுள்ளனர்.
வடமாநிலங்களில் மசூதிக்குள் சென்று ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடும் இந்துத்துவா கும்பலால்தான் மத கலவரங்கள் ஏற்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆக இந்த ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை உயர்த்திப்பிடிக்க பயன்படுத்தப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அப்படியெனில், பல்வேறு மதங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலும் கல்லூரியில் ஆளுநர் இப்படி முழக்கமிட காரணம் என்ன? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications