தடுப்பூசிதான் போட்டு முடிச்சாச்சே.. ரயிலில் முதியோர் கட்டண சலுகை ஏன் தரவில்லை.. சு.வெங்கடேசன் நறுக்
மதுரை: முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் ரயில்வே அமைச்சகம் காலம் தாழ்த்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த பரிந்துரையின் மீது பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் சுமார் 12 முதியவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வலியுறுத்தல்
இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுவதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் பயண சலுகை ரத்து செய்யப்பட்டது. இப்போது 200 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் முதியோர் ரயில் பயண சலுகையை வழங்க வேண்டும் என்று பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

வருவாய்
ரயில்வே அமைச்சகம் இது சாத்தியம் இல்லை என்று பதில் அளித்தது. நாடாளுமன்றத்தில் என் கேள்விக்கு பதிலளிக்கும் போது பயணிகள் போக்குவரத்து இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் பயணிகள் வருமானம் 2019-20 காலகட்டத்தில் 45000 கோடி வருமானத்தை மீண்டும் 21 22 இல் எட்டியுள்ளது என்று பட்ஜெட் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த காரணம் நியாயமானது அல்ல. அத்துடன் எனது கேள்விக்கு அளித்த பதிலில் 6.18 கோடி பெர் 2019-20ம் ஆண்டில் முதியோர் பயண சலுகை பெற்று முன்பதிவுடன் பயணம் செய்துள்ளனர்.

பயண சலுகை
5.86 கோடி முதியோர் முன்பதிவின்றி பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை 2021-2022ல் முன்பதிவு வண்டிகளில் 63 லட்சம் குறைந்துள்ளது. ஏனெனில் சலுகை இல்லாததால் முதியோர் பயணத்தை தவிர்த்துள்ளனர். இவர்களுக்கு பயண சலுகை அளித்ததால் 2019-20 ஆம் ஆண்டு 1667 கோடி ரூபாய் ரயில்வேக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். 12 கோடிக்கும் மேலான முதியோர் இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை கவனிக்கும் போது இந்த தொகை பெரிய தொகை அல்ல என்பதை உணர முடியும்.

பாதுகாப்பு
அதோடு சரக்கு போக்குவரத்தில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிடும்போது இது வெறும் குறைவான தொகை தான் என்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் விமான சேவையிலும் முதியோருக்கு ஒரு வகையான சலுகை அளிக்கப்படுகிறது. எனவே இந்த சலுகையை கொடுக்காமல் காலம் கடத்துவது நியாயமானது அல்ல. இந்த நாட்டில் 14 கோடியே 43 லட்சம் முதியோர் உள்ளார்கள் இவர்களில் 12 சதமானம் பேருக்குத்தான் ஏதேனும் ஒரு வகையான சமூக பாதுகாப்பு உள்ளது.

இலவச பயணம்
மற்றவர்கள் 88 பேர் தங்கள் குழந்தைகளை நம்பி வாழ்கிறார்கள். கண்ணியமான வேலை இன்றி, நிரந்தர வேலையின்றி பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் நிறைய பேர் உள்ளார்கள். இந்த நிலையில் மருத்துவ வசதிகளுக்காகவும் தீர்த்த யாத்திரைகளுக்காகவும் முதியோர் பயணிக்க வேண்டி உள்ளார்கள். அவர்களுக்கு பயண சலுகை மறுப்பது நீதியல்ல. மற்ற நாடுகளில் முதியோர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சில நாடுகளில் பயணம் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

பரிந்துரை
இந்தியாவில் ரயில்வேயில் பெண் பயணிகளுக்கு 58 வயது ஆனவர்களுக்கு 50 சத பயண சலுகையும், 60 வயதான ஆண் பயணிகளுக்கு 40 சத பயண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது. இதனை திரும்ப அளிப்பது மிகத்தேவையாகும். இதனால் தான் சமீபத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலைக் குழு தனது 12வது அறிக்கையில் 14வது பரிந்துரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது: 'தொற்று நோயின் காரணமாக முதியோர் பயண சலுகை நிறுத்தப்பட்டது. இந்த கமிட்டி ரயில்வே சாதாரண நிலைமையை மீண்டும் எட்டுவதை கணக்கில் கொண்டு இந்த சலுகையை திரும்பி வழங்க நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

கடிதம்
இந்த சலுகையை குறைந்தபட்சம் ஸ்லீப்பர் கிளாஸ் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி ஆகியவற்றுக்கு உடனடியாக அவசரமாக திருப்பி அளிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்' இந்த கமிட்டியின் தலைவர் உதவி தலைவர் ராதா மோகன் சிங் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பரிந்துரையை சுட்டிக்காட்டி நான் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் .அதில் இந்த சலுகையை குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணங்கள். இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி. மூன்றாம் வகுப்பு குளிர்சாதன படுக்கை வசதி ஆகியவற்றுக்கு விரிவாக்கி பயண சலுகையை மீண்டும் வழங்கி கோரி உள்ளேன ரயில்வே அமைச்சகத்தையும், இது குறித்து விரைந்து முடிவெடுக்க கோரி உள்ளேன்." என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications