ரீல் இல்லை.. ரியல் ஃபைட்..? மதுரை மத்தி யாருக்கு? வெல்லப் போவது பிடிஆரா? சுந்தர்.சி-யா?
மதுரை: மதுரை மத்தி தொகுதியில் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்குத் தக்க பதிலடி தரும் வேட்பாளராகச் சுந்தர் சி மாறியுள்ளதால் களம் தன் பழைய சூழ்நிலையை விட்டு நகர்ந்து வருகிறது.
மூன்றாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் பிடிஆர் பழனிவேல் ராஜன். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சியின் 'திடீர்' வேட்பாளராகக் களம் கண்டுள்ளார் இயக்குநர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் மதுரை மண் கதைகளைப் பேசும் படங்கள் என்றால் வேகம் அதிகமாக இருக்கும்.

சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கும். அது ரீல். ஆனால், இப்போது மதுரை மத்திய தொகுதியில் ரீல் இல்லை ரியலாகவே சண்டைக் காட்சிகள் உச்சம் பெற்றுள்ளன. பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கும் சுந்தர் சிக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர், மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது.
பழனிவேல் ராஜன், "கூத்தாடி, சினிமா சங்கி" என்று சுந்தர் சியை அர்ச்சனை செய்து வருகிறார். அதற்கு வெகுண்டு எழுந்து கொந்தளிக்காமல் கூலாக பதிலடி கொடுத்து வருகிறார் சுந்தர் சி. அவர் இரட்டை இலை சார்பில் போட்டியிடுகிறார். இந்த மதுரைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது பழனிவேல் ராஜனின் குற்றச்சாட்டு.
வெளிநாட்டில் படித்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர் இவர், 'நான் மதுரைக்காரன்' என்று அடையாள அரசியல் பேசுகிறார். சினிமா இயக்குநர் என்றும் படிக்காதவர் என்றும் பழனிவேல் ராஜனால் விமர்சிக்கப்பட்டு வரும் சுந்தர்.சி-யோ, "இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாடு, உள்நாடு என்பது எல்லாம் பழைய கான்செப்ட். எனக்குப் பழனிதான் சொந்த ஊர். நான் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்துக்காரன்" என்கிறார்.
களத்தில் ஆரம்பத்தில் சுந்தர்.சி-க்கு பெரிய அளவு ஆதரவு இல்லை. அவர் ஏதோ சினிமா இயக்குநர் என்ற அளவில் மட்டுமே முதலில் மக்கள் நினைத்தனர். ஆனால், களத்திற்கு வந்த சுந்தர்.சி, மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி ஊழல் பற்றி நியாயம் கேட்டார். எந்த வசதியுமே செய்து கொடுக்காமல் இருக்கிறார் பழனிவேல் ராஜன் என்றும் அவரைப் போல் வெளிநாட்டிலிருந்தா நான் மதுரைக்கு வந்துள்ளேன் என்று நியாயம் பேசியது மக்களை ஈர்த்துள்ளது.
மாறாகப் படித்த பழனிவேல் ராஜன் களத்தில் பச்சோந்தி என்றும் 5 கட்சிகள் மாறியவர் குஷ்பு என்றும் அடிமட்டமாக இறங்கி அடிப்பதைப் பலர் ரசிக்கவில்லை. தேசிய ஊடகங்களில் மிக நாகரிகமாகக் கருத்துகளை முன்வைக்கும் அவர், சொந்த தொகுதியில் மிகத் தரக்குறைவாகப் பேசுகிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.
இந்த இரண்டு வேட்பாளர்களால் மதுரை மத்திய தொகுதி உண்மையாகவே சினிமா பார்ப்பதைப் போல உள்ளது. தினமும் மாலை வேளைகளில் இந்த இருவரின் மோதலை பலரும் ரசிக்கிறார்கள். சுந்தர் சி, 'மிஸ்டர் க்ளீன்' என்ற அடையாளத்துடன் அரசியலில் வலம் வரும் பிடிஆர் பழனிவேல் ராஜன் மீது ஊழல் புகார்களை வைக்கிறார். 'ஒரு கை பார்த்துவிடுவோமா?' என்று கேட்டவரை நோக்கி, 'உங்களின் வலது கை ஏன் சிறையில் உள்ளது. இடது கையாக இருந்தவர் ஏன் தலைமறைவாக வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார்.
அந்தக் கையைப் பாருங்கள், பிறகு ஒரு கை பார்ப்போம்' எனத் தனது சினிமா பாணி வசனங்களைப் பேசி சுந்தர் மக்களை மனம் மாற்றி வருகிறார்.
ஆரம்பத்தில் டம்மி வேட்பாளர் என நம்பிய மக்கள் இப்போது சுந்தர்.சி-யை உற்றுக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 2016, 2021 என இரு முறை இந்தத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான்.
இவரது செல்வாக்கைச் சரிக்க இப்போது 'பழநி'யிலிருந்து வந்துள்ளார் சுந்தர் சி. மத்தி தொகுதியில் மொத்தம் 1,96,856 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த முறை பழனிவேல் ராஜன் 73,205 வாக்குகளைப் பெற்றார். 2016 ஐ விடக் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். அதிமுக 2021இல் 39 ஆயிரம் வாக்குகளைத்தான் பெற்றது. 2011இல் தேமுதிக வென்ற தொகுதி. அது இந்தமுறை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
அதுவும் ஒரு பலமாகிறது. மநீக வேட்பாளர் 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். அக்கட்சியும் இதே கூட்டணியில் இணைந்துள்ளது. இது எல்லாம் பழனிவேல் ராஜனுக்குப் பலம். ஆனால், அவர் சில சமயங்களில் வெளிப்படையாக உண்மையைப் போட்டு உடைத்துவிடுவதால் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அவர் பக்கம் லீக் ஆன வீடியோ அவர் இமேஜை சற்று பாதித்துள்ளது.
சாதி ரீதியாகப் பார்த்தால், பழனிவேல் ராஜனும் சுந்தர் சியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதைச் சரியாகக் கணித்தே அதிமுக இங்கே இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. நீதிக் கட்சியே ஒருகாலத்தில் வேளாளர்கள் கட்சி என்ற அடையாளம் பெற்றிருந்தது. அதை உணர்ந்து புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக இத்தொகுதியைத் தூக்கிக் கொண்டுள்ளது. அது பிடிஆருக்கு ஒரு பின்னடைவு என்கிறார்கள்.
மேலும் 2 முறை அவர் இங்கே வென்றுள்ளார். பழைய முகமாகவே மக்கள் நினைக்கிறார்கள். புதியவருக்கும் வாய்ப்புத் தரலாம் என சில குரல்கள் கேட்கிறது. காரணம், பழனிவேல் ராஜனுக்கு திமுக தலைமையில் நல்ல செல்வாக்கு இல்லை என்ற குறைபாடும்தான். திமுக ஆதரவு நிலைப்பாடு உள்ள ஊடகங்கள் இந்தக் குறைகளை பிடிஆர் உடைத்து எறிந்துவிடுவார் என்றும் 40% க்கும் மேல் வாக்குகளைப் பெறுவார் என்றும் சொல்கின்றன.
ஆனால் அதிமுக 36% வரை பெறும் என்கிறார்கள். களமோ சுந்தர்.சி-க்கு அதைவிட அதிகம் உள்ளதாகவே உணரச் செய்கிறது. அவரது பதிலடி பலமாகக் கேட்கிறது. அதை அறிந்தே பிரச்சாரங்களில் பிடிஆர் தொடர்ந்து சுந்தர் சி மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்துகிறார். 'கூத்தாடி அவர். சினிமாவுக்குப் போய்விடுவார்' என்று கூறுகிறார்.
அதற்கு, "அண்ணாதுரை முதல் உதயநிதிவரை கூத்தாடிகள்தான். அதைத் தைரியமாக உங்களால் பேச முடியுமா?' என்கிறார் சுந்தர் சி. இந்த உடனடி மறுப்பு கொஞ்சம் பிடிஆரை கலங்கடித்துள்ளது. பழைய நிலைபோல் அவர் மிக எளிதாக வெல்ல முடியாது என்பதை உணர்த்துகிறது கள நிலவரம்.
- கடற்கரய்
-
என்டிஏ ஆதரவு.. அமைப்பாய் இணையாத செளராஷ்டிரா மக்கள்.. மதுரை அரசியலில் தாக்கம் செலுத்துவார்களா? -
கொள்கை அரசியல் பேசாத சுந்தர்.சி.. சிக்கலாகும் சிறுபான்மை மக்கள் வாக்குகள்! மதுரை மத்தி நிலவரம் என்ன -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. 3 விஷயங்கள் மட்டுமே இலவசமாக கொடுப்பேன்.. அடித்து சொன்ன சீமான்! -
மதிமுகவின் எதிர்காலமே இந்த தேர்தலில் இருக்கு.. 4 தொகுதிகளின் கள நிலவரம் சொல்வது என்ன? -
ரஜினிக்கு வந்த சோதனை.. தலைவர் 173ல் சுந்தர் சி- யை போல வெளியேறிய சிபி.. இனி புது இயக்குனர் இவரா? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
Seeman: வாக்கு சதவிகிதம் முக்கியம் அல்ல.. சீமான் சட்டசபை போகணும்.. இலக்கை மாற்றிய நாம் தமிழர்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
மனைவி வெற்றியைவிட.. பென்னாகரம் தொகுதியில் ஜிகே மணி மகன் தோல்வி பெருசு.. தீவிரம் காட்டும் அன்புமணி! -
காங்கிரஸ், பாஜக கோட்டையில் குறிவைக்கும் தவெக.. விஜய்யின் பிரச்சார பயணம் தற்செயலானது அல்ல!












Click it and Unblock the Notifications