மன்னிப்பு கேட்டால் போதுமா? கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு! நீதிமன்றம் சொன்ன கருத்து!
மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தெலுங்கு மக்களும் தமிழகத்தில் ஒரு பகுதியானவர்கள் தான் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிராமணர்கள் சங்கத்தின் சார்பாக பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரி பேசியது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் தெலுங்கு சமுதாய மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிடத்தக்க தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்து வருகின்றனர். தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு, நாயுடு மகாஜன சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார் அளித்தன.
குறிப்பாக சென்னை எழும்பூர், மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்றனர். ஆனால் வீட்டை பூட்டி விட்டு கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவரை கைது செய்ய போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, "கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசி இருக்கிறார். குறிப்பிட்ட சமூகத்தின் மாண்பை குறைக்கும் வகையில் நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். எளிதாக மன்னிப்பு கூறிவிட்டால் புண்பட்ட அவர்களின் மன வருத்தம் சரியாகி விடாது. கஸ்தூரிக்கு முன் ஜாமீன் தரக் கூடாது. பிறருக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என தமிழக அரசு தரப்பு வாதிட்டது.
தொடர்ந்து எத்தனை வழக்குகள் கஸ்தூரி மீது பதிவாகியுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்புக் கூறியது. மேலும் குறிப்பிட்ட சமூகத்தினரை கொண்டு மட்டும் அந்தக் கூட்டம் நடக்கவில்லை என கஸ்தூரி தரப்பு வாதிட்டது. அப்போது தெலுங்கு பேசினாலும் அந்த மக்களும் தமிழகத்தின் ஒரு பகுதியினர் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
