மகளிர் உரிமை தொகை வழங்க மட்டும் பணம் இருக்கா? பழைய ஓய்வூதியம் தான் ஒரே வழி! அரசு ஊழியர்கள் வார்னிங்!
மதுரை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களின் போராட்டத்தை திசை திருப்பவே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம், அதாவது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்
இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தது. நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது ஆட்சி நிறைவடையும் சூழலில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசு ஊழியர் போராட்டம்
தொடர்ந்து தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழுவை அமைத்தது. கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த இந்த குழு, தற்போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான எந்தவித அறிவிப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தை திசை திருப்ப ஓய்வூதிய திட்ட ஆய்வு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கம் விமர்சித்துள்ளது.
திமுக அரசு வாக்குறுதி
இது தொடர்பாக பேசிய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ்," ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக வாக்குறுதி அளித்துவிட்டு நான்கரை ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை. சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடம் எதிர்காலத்தில் ஓய்வூதியம் உட்பட எந்த ஓய்வூதிய பலனையும் கூற மாட்டோம் என உறுதிமொழி பத்திரம் வாங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழகம் 2 சதவீதம் கூடுதலாக பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
மகளிர் உரிமை தொகை
இந்த நிலையில் ஆனால் வளர்ச்சியில் பின்தங்கிய ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. பஞ்சாப், சிக்கிம் அரசுகளும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டன. அப்படி அந்த மாநிலங்களில் ஏற்படாத இழப்பு தமிழகத்திற்கு ஏற்படுமா? மகளிர் உரிமை தொகைக்காக மாதம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1.8 லட்சம் கோடி அரசுக்கு எப்படி கிடைக்கிறது? மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணத்தை அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாதா?
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தான் அரசுக்கு ஒரே வழி இல்லையென்றால், ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் போராட்டம் தீவிரமடையும். இதில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஈடுபடுவார்கள் என்பதால் அந்த போராட்டத்தை திசை திருப்பத்தான்ககன்திப் சிங் பேடி தலைமையில் மூன்று நபர் குழு இறுதியில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அறிக்கை எங்களுக்கு போதாது. பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications