50 தமிழ் உரைகள்.. நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. சு.வெங்கடேசன் பெருமிதம்!
மதுரை: சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரில் லோக்சபா 92 மணி நேரம் 25 நிமிடங்களும், மாநிலங்களவை 92 மணி நேரமும் செயல்பட்டுள்ளது. வந்தே மாதரம் விவாதம், SIR விவாதம், 100 நாள் வேலைத் திட்டம் மாற்றம் விவாதம் நடைபெற்றது.

அதேபோல் 300 நட்சத்திர கேள்விகளும், 3,449 நட்சத்திர குறியீடு அல்லாத கேள்விகளும் அனுமதிக்கப்பட்டன. அதில் 300 நட்சத்திர கேள்விகளில் 72 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதேபோல் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபாவில் 137 தனிநபர் மசோதாக்களும், ராஜ்ய சபாவில் 59 தனிநபர் மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள பதிவு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத்தொடரில் தான். அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ்.
சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத்தொடரிலேயே ஐம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் தான். இது தான் இந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் சு.வெங்கடேசன் பேசிய வீடியோவில், ஏறக்குறைய 80க்கும் அதிக எம்பிக்கள் இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பேசவில்லை.
தங்களின் தாய்மொழியிலேயே பேசி இருக்கின்றனர். அதில் 50க்கும் மேல் தமிழ் உரைகள் இடம்பெற்றன என்று தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், நாடாளுமன்றத்திலும் தாய்மொழியில் அதிக எம்பிக்கள் உரையாற்றி வருவது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications