மதுரைக்கு 2வது சித்திரை திருவிழா.. வரப் போறாரு தவெக விஜய்! எப்போது தெரியுமா? வெளியான தகவல்!
மதுரை: கோவையும், திண்டுக்கல்லும் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தயாராகி வருகிறார் தவெக தலைவர் விஜய். மதுரையில் அடுத்த பூத் கமிட்டி மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் உறுதியான தேதி அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறுகின்றனர் மதுரை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சி மாநாட்டை தவிர விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து கள அரசியலுக்கு திரும்பும் வகையில் முதன்முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். சென்னையில் இருந்து பரந்தூர் செல்லும் வரை விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தினாலும் சென்னையை தாண்டி விஜய் வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்ற நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்தாலும் கோவை விமான நிலையத்திலிருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கும் விஜய் சென்று வரவே 5 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜயை பார்த்தனர். பூத் கமிட்டி மாநாட்டுக்கு ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயை பார்ப்பதற்காகவே கோவையில் திரண்டனர். கோவை கொடுத்த வரவேற்பில் அடுத்ததாக சேலம், சென்னை, நெல்லை, மதுரை என அடுத்தடுத்த மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மதுரையில் விஜய் பூத் கமிட்டி மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் தற்போது இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடையில் திண்டுக்கல்லில் ஜனநாயகம் பட சூட்டிங் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த விஜயை தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து சென்றனர்.
இதனால் உற்சாகமடைந்துள்ள விஜய், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து பூத் கமிட்டி ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவெடுத்திருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், எப்போது விஜய் மாநாடு நடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜூன் மூன்றாவது வாரத்தில் விஜயின் மாநாடு நடக்க இருக்கிறது, சரியான தேதியை அடுத்த வாரம் விஜய் அறிவிப்பார் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications