அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பேட்டி அளித்த தமிழிசை சௌந்திரராஜன், அண்ணாமலை கட்சியில் இளைஞர்கள் யாரும் செல்லவில்லை சுயநலவாதிகள் தான் சொல்கிறார்கள். தாமரையில் ஒரு இதழை கூட யாராலும் அசைக்க முடியாது.. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மக்களின் இறை உணர்வை கொச்சைப்படுத்துவது தவறு.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு வெளிச்சம் பிடிக்காது மின்வெட்டு மற்றும் இருட்டு தான் பிடிக்கும் என்று விமர்சித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,"பாஜகவில் நெடுங்காலம் பயணிப்பதை நாங்கள் பெருமை கொள்கிறோம். தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பல சவால்களை சந்தித்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்து மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சியை இழந்தது.இந்து மக்களின் இறையுணர்வு, உள்ளுணர்வை ஏதோ மதக்கலவரம் போல் சித்தரிப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

Tamilisai Soundararajan Annamalai

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்

இதே அருளோடு, அன்போடு திருப்பாற்பகுன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று சொல்லியுள்ளார். அவர் அப்படி சொல்வதில் ஆச்சரியமில்லை, அவருக்கு வெளிச்சம் பிடிக்காது, மின் வெட்டு, இருட்டு தான் பிடிக்கும். அது எங்களால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆணவத்தின் வெளிப்பாடு

நீதிமன்றமே சாமானிய மக்களின் உணர்வுகளுக்கு தீர்ப்பளித்து தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்த பின்பும், தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது, ஆணவத்தின் வெளிப்பாடு. ஏதோ விசில் சத்தம் சற்று சத்தமாக கேட்டுவிட்டதற்காக, பக்தர்களின் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால் உங்கள் விசில் சத்தத்தை விட உறுதியானது, உரக்கமானது, வலிமையானது. கடந்த திமுக ஆட்சி செய்த தவறு போல் மதக்கலவரம், அமைதியை நிலை நாட்ட விரும்புகிறோம் என்று சொல்ல முடியாது.

மக்களின் உணர்வு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். இந்துக்களின் பரந்த மனப்பான்மையை இந்த அரசு இடற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது? அந்த மக்களே தான் உண்ணாவிரதம் இருந்தார்கள்.பொது மக்களின் உணர்வை மத உணர்வு என கொச்சைப்படுத்துவது தவறு.

டாஸ்மாக்கிற்கு பதில் மனமகிழ்மன்றம்

மின்சாரத் துறையில் ஊழலே இல்லை என்று சொன்னார்கள். 26 ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக சொன்னார்கள். ஆனால் ஒரு சில ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக தான் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே ஊழலை காப்பாற்றுவதில் இவர்களும் ஊக்கமாக இருக்கிறார்கள்.717 டாஸ்மாக் கடையை மூடினாலும் மனமகிழ் மன்றம் திறந்து தான் உள்ளது. கடை மூடிய இடத்தில் தனியார் பார்கள் திறக்கப்படுவதாக செய்திகள் வருகிறது. டாஸ்மாக் கடையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் திறந்திருக்கும் ஆனால் திறந்திருக்காது. மூடி இருக்கும் ஆனால் மூடி இருக்காது இதுதான் கதை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது சிங்கப்பெண்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. முதலில் தமிழக சிங்கப்பெண்களை காப்பாற்றாமல், சிங்கப்பெண் திட்டத்தை தொடங்குவேன் என்று சொல்வது பெண்கள் பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது என்று தான் அர்த்தம் என்றார்.

அண்ணாமலையால் தாமரைக்கு பாதிப்பில்லை

அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினர் தான் அதிகம் இணைந்துள்ளதாக செய்திகள் வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, "எங்கள் கட்சியில் லட்சியவாதிகள் உள்ளார்கள்.அங்கே லட்சம் பேர் இருப்பதாக சொல்வதை நான் பொருட்படுத்தவே இல்லை. எங்கள் கட்சி தொண்டர்கள் இரத்தம், வியர்வை சிந்தி வளர்த்தவர்கள், வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஆட்சியில் அமர வைக்க போகிறவர்கள். எந்த இளைஞர்களும் அவரிடம் செல்லவில்லை, சுய நலவாதிகள் தான் சென்று இருப்பார்கள், பொது நல வாதிகள் யாரும் செல்லவில்லை. அவருக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. எங்கள் கட்சி உறுதியாக உள்ளது.தாமரையில் ஒரு இதழை கூட யாராலும் அசைக்க முடியாது. தாமரை பொற்றாமரையாக 2031 ஆம் ஆண்டில் ஆட்சியில் வீற்றிருக்கும். போனவர்களை பற்றி கவலையில்லை, இருப்பவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்றார்.

முதுகில் குத்திய காங்கிரஸ்

தமிழகத்தில் பாஜக எடுபடாத காரணத்தினால் அண்ணாமலையை வைத்து அரசியல் செய்கிறது என்ற மாணிக்கம் தாகூர் கருத்துக்கு தமிழிசை பதில் அளிக்கையில், "மாணிக்கம் தாகூர், வன்னி அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலைமை பாஜகவுக்கு கிடையாது. காங்கிரஸ் கட்சியில் வேண்டுமானால் ஜோதிமணிக்கு ஒரு முகம், மாணிக்கம் தாகூருக்கு ஒரு முகம் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு முகத்தை காண்பித்து தான் திமுக முதுகில் குத்தினீர்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை, நாங்கள் ஒரே முகம் தாமரை முகம், பாஜக முகம் தான். வேறு முகங்களை காண்பித்து பாஜகவுக்கு மாற்று சக்தியாக தேட வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை என்பதை மிக தெளிவாக உறுதிபடுத்துகிறேன். பாஜகவிலிருந்து சென்றவர்களுக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது.இவ்வளவு நடந்த பின்பும் பாஜக உறுதியாக உள்ளதால், ஏதோ கதை கட்டி விடலாம் என மாணிக்கம் தாகூர், வன்னி அரசு கதை கட்டுகின்றனர் என்றார்.

அண்ணாமலையிடம் கேளுங்கள்

பாஜகவில் இருந்து அண்ணாமலை சென்று சென்றதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில்அளித்த தமிழிசை, அந்த காரணத்தை அண்ணாமலையிடம் கேளுங்கள். ஆனால் பாஜகவை நேசித்த தொண்டர்கள் இங்கு தான் உள்ளார்கள். பாஜகவில் இருந்தார்கள் செல்லவில்லை என்று நான் சொல்லவில்லை. உண்மையாக இருப்பவர்கள் போகமாட்டார்கள் என்று தான் சொல்கிறேன். அப்படி போனவர்கள் உண்மையில்லை என்று தெரிந்தவுடன் திரும்பி வந்துவிடுவார்கள் என்றார்.

பலம் இழக்கவில்லை

அண்ணாமலை சென்ற பின் கட்சி வலிமையாக உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, பாஜக மிகவும் பலமாக தான் உள்ளது. சில பேர் அவர் வந்ததால் பலமாக இருந்ததாக சொல்கிறார்கள். அவர் வந்ததால் பாஜக பலம் பெறவில்லை, போனதால் பலம் இழக்கவில்லை. பாஜக எப்போதும் பலமாக தான் உள்ளது.

30 நாட்களை ஓட்ட முடியவில்லை

விஜய் ஆட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை., அவர் படம் 100 நாட்கள் ஓடியது என பெருமையாக பேசலாம். இந்த ஆட்சி 30 நாட்களிலேயே திக்கித் திணறி ஓடிக்கொண்டிருக்கிறது. 100 நாட்கள் படத்தை ஓட்டிய முதல்வர் விஜயால் 30 நாட்கள் அரசை ஓட்ட கவலையாக உள்ளது என்றார்.

விஜய் அரசு நீடிக்குமா

இந்த ஆட்சி 5 வருடம் நீடிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, அதை ஓட்டுவதை பொறுத்து தான் உள்ளது..
கம்யூனிஸ்ட், விசிக முட்டுக் கொடுத்து உள்ளார்கள். என்றைக்கு முட்டு எடுக்குறார்கள் என்பது எனக்கு தெரியாது. மறைமுகமாக ஆதரவை தெரிவித்துள்ள ஸ்டாலினிடம் கேளுங்கள். இங்கேயும், அங்கேயும் உள்ள திருமாவளவனிடம் கேளுங்கள். முத்தரசனிடம் கேளுங்கள். அவர் தொப்புள் கொடி அறுக்கப்படவில்லை என்று கூறுகிறார். தொப்புள் கொடி அறுக்கப்படாத ஆட்சியில் தான் நீங்கள் இருக்கிறீர்களா? இரட்டை வேடம் போட்டுக்கொண்டுள்ளார்கள்.

ராகுல் காந்தி இரட்டை வேடம்

ராகுல் காந்தி இரட்டை வேடம் போடுபவர் என்று இப்போது தான் திமுக உணர்ந்துள்ளது. ஆனால் இதை நாங்கள் 10, 15 வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால் நீங்கள் ராகுல் காந்தியை கொண்டாடி கொண்டிருந்தீர்கள், அவர் உங்கள் முதுகில் குத்தி விட்டுச் சென்றுவிட்டார். இந்தியா கூட்டணி வெலா வெலத்து போய்விட்டது என்றார்.

அதிமுகவின் எதிர்காலம்

அதிமுக எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை, அதிமுக எதிர்காலம் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அந்தந்த கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் விசிலில் இருந்து அசலுக்கு வர வேண்டும். இன்னொரு கட்சியில் இருந்து புள்ள பிடிப்பதில் கவனம் செலுத்தாமல், ஆட்சியை பிடித்து வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதிமுக வினரிடம் பேரம் பேசப்பட்டிருக்கிறது.. என்ன பேரம் என்று தெரியவில்லை இவ்வாறு தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+