மதுரையில் தவெகவின் 2வது மாநாடு.. அதிகாலை நடக்கும் பூமி பூஜை.. சைலண்டாக முகாமிட்ட புஸ்ஸி ஆனந்த்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டுக்கான பூமி பூஜை நாளை அதிகாலை மதுரையில் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எலியார்பத்தி அருகே உள்ள இடத்தை தவெக மாநாட்டுக்காக தேர்வு செய்து சுத்தம் செய்யப்பட்டு நிலையில், நாளை காலை 4 மணியளவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூமி பூஜை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மையில் தவெக செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த செயற்குழு கூட்டத்திலேயே தவெகவின் 2வது மாநில மாநாடு மற்றும் விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் தவெக மாநாடும், செப்டம்பர் மாதம் விஜயின் சுற்றுப்பயணமும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

தவெகவின் 2வது மாநாடு
சட்டமன்றத் தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில், 2வது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தவெக முடிவு செய்துள்ளது. இதனால் தேர்தல் பணிகளையும் தொடங்குவதற்கு சரியான முன்னோட்டமாக இருக்கும். இந்த நிலையில் 2வது மாநில மாநாடு எங்கு நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை நடக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
மதுரையில் நடத்த திட்டம்
மதுரையில் மாநாட்டை நடத்த தவெகவின் தீவிரமாக இடத்தை தேடி வந்தனர். ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டை நடத்துவதற்கு முன்பே தவெகவிற்கு இடம் கொடுக்க பலரும் மறுத்தனர். ஒரு வழியாக விக்கிரவாண்டியில் இடத்தை தேடி பிடித்ததோடு, அதனை சுத்தம் செய்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டினர். இதனால் மதுரையில் இடத்தை தேர்வு செய்தபின் மாநாடு தேதியை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
நாளை பூமி பூஜை
இந்த நிலையில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தியில் தவெக தனது 2வது மாநாட்டை நடத்த முடிவு எடுத்திருக்கிறது. தவெகவினர் இடத்தை தேர்வு செய்துவிட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை அதிகாலை மாநாடு பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நடக்கவுள்ளது.
மதுரையில் புஸ்ஸி ஆனந்த்
இதற்காக மதுரை வந்துள்ள தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் மட்டும் கூறிவிட்டு பிரபலமான ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இதன்பின்னரே காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி தவெக சார்பாக கடிதம் அளிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்காக 3 தேதிகளை தவெக முடிவு செய்துள்ளது.
தவெகவின் திட்டம்
சுமார் 70 முதல் 100 ஏக்கர் அளவிற்கு தவெகவின் மாநாட்டு திடல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மாநாட்டில் தொண்டர்கள் அமர்வதற்கான இடம் மற்றும் பார்க்கிங் செய்வதற்கான இடம் தனித் தனியாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அனுமதி அளிக்கப்படவில்லை என்றால், தவெக சார்பாக நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
வேட்பாளர்கள் அறிமுகம்?
ஆகஸ்ட் 3வது வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மாநாடு நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் இந்த மாநாட்டில் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்ய விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருந்து முதற்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications